
ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாட உள்ள 2024 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்தியா முதல் முறையாக விராட் கோலி தலைமையில் 2018/19ஆம் ஆண்டு கோப்பையை வென்றது. அதற்கு பதிலடியாக 2020/21 தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியாவை 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாற்றுத் தோல்வியை பரிசளித்தது.
ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா இளம் வீரர்களை வைத்தே ஆஸ்திரேலியாவை 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் தோற்கடித்தது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் அணியாக இந்தியா உலக சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.
இந்தியா பி டீம்:
இந்நிலையில் 2020/21 தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 36க்கு ஆல் அவுட்டாக்கிய தாங்கள் தொடரை வெல்வோம் என்று நினைத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேசல்வுட் கூறியுள்ளார். மேலும் அப்போட்டியில் சில முக்கிய வீரர்கள் இல்லாததால் காபாவில் நடைபெற்ற கடைசி போட்டியில் இந்தியா பி அணியுடன் ஆஸ்திரேலியா விளையாடுவதாக பலரும் கூறியதாக ஹேசல்வுட் தெரிவித்துள்ளார்.
ஆனால் அப்போட்டியில் வாஷிங்டன் சுந்தர், நடராஜன் போன்ற இளம் வீரர்களை வைத்தே இந்தியா தங்களை தோற்கடித்ததாக அவர் பாராட்டியுள்ளார். இருப்பினும் இம்முறை ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் சுதாரிப்புடன் விளையாடி இந்தியாவை தோற்கடிக்கும் என்று அவர் உறுதியான நம்பிக்கையை தெரிவித்துள்ளார். இது பற்றி ஹேசல்வுட் பேசியது பின்வருமாறு.
“இந்தியாவை ஒரு டெஸ்ட் தொடரில் இதுவரை தோற்கடிக்காத சில வீரர்கள் எங்களுடைய அணியில் உள்ளனர். அதை சொல்வது எங்களுக்கே பிரம்மிப்பாக இருக்கிறது. நாங்கள் இம்முறை அதை முடிக்க வேண்டும். ஏனெனில் கிட்டத்தட்ட சொந்த மண்ணில் நாங்கள் விளையாடும் ஒவ்வொரு தொடரிலும் வென்று வருகிறோம். கடந்த தொடரில் அடிலெய்ட் நகரில் அவர்களை 36க்கு ஆல் அவுட்டாக்கினோம்”
இதையும் படிங்க: 2008இல் அப்படி அவுட்டானப்பவே விராட் கோலி அதை செய்வாருன்னு எனக்கு தெரியும்.. பாராட்டிய கம்பீர்
“அப்போது சொந்த மண்ணில் மீண்டும் நாம் வந்து விட்டோம் என்று நாங்கள் நினைத்தோம். கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா பி அணியுடன் நாங்கள் விளையாடியதாக மக்கள் சொன்னார்கள். ஆனால் அப்போட்டியில் இந்தியா தங்களுடைய சிறந்த அணியை விட வலுவான வீரர்களை கொண்டிருந்தது. அவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஆழமான திறமையைக் கொண்டுள்ளனர். அதை நாங்கள் தற்போது பார்க்கத் துவங்கியுள்ளோம்” என்று கூறினார்.