IND vs ENG : மோர்கனுக்கு பின் இங்கிலாந்தின் புதிய அதிரடி கேப்டன் அறிவிப்பு, அறிமுக தொடரில் சமளிக்குமா இந்தியா?

IND-vs-ENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு வரலாற்றில் முதல் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டனாக சரித்திரம் படைத்துள்ள இயன் மோர்கன் சுமாரான பார்ம் மற்றும் காயம் காரணமாக கேப்டன் பதவியிலிருந்து மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவித்தார். அயர்லாந்தில் பிறந்து அந்நாட்டுக்காக விளையாடிய அவர் 2009 முதல் 3 வகையான இங்கிலாந்து அணியிலும் விளையாடினாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் அதிரடியாக பேட்டிங் செய்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதனால் 2014இல் தேடி வந்த கேப்டன் பொறுப்பில் 2015 உலகக்கோப்பையில் அவரது தலைமையில் இங்கிலாந்து காலிறுதியுடன் வெளியேறியது.

அதற்காக விமர்சனங்களை சந்தித்த அவர் இனிமேல் அதிரடி மட்டுமே வெற்றியை பெற்றுக் கொடுக்கும் என்ற கோணத்தில் அதை செயல்படுத்துவதற்காக ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ போன்ற வீரர்களுக்கு அதிகப்படியான ஆதரவையும் வாய்ப்பை அளித்து ஒருசில வருடங்களில் இங்கிலாந்தை அதிரடிப்படையாக மாற்றினார். அதன் பயனாக 2016 முதல் அதிகப்படியான வெற்றிகளை குவிக்க தொடங்கிய இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணுக்கு வரும் அணிகளை சரமாரியாக அடித்து ஒருநாள் போட்டிகளில் அசால்டாக 300 – 400 ரன்களை குவித்து அதகளப்படுத்தியது.

- Advertisement -

அடுத்த கேப்டன் யார்:
அதே அதிரடியை சொந்த மண்ணில் நடைபெற்ற 2019 உலக கோப்பையிலும் தொடர்ந்த அவரது தலைமையிலான இங்கிலாந்து வரலாற்றில் முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் அந்நாட்டு ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த அவர் 2020க்கு பின்பு தனது பார்மை இழந்து ரன்கள் குவிக்க தடுமாறினார். போதாகுறைக்கு இடையிடையே காயங்களை சந்தித்ததால் அதிகமாக தடுமாறிய அவரை ஐபிஎல் 2021 தொடருடன் கொல்கத்தா அணி நிர்வாகமும் கழற்றி விட்டது.

அந்த நிலைமையில் கடைசியாக நெதர்லாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் அடுத்தடுத்த டக் அவுட்டான அவர் கடைசி போட்டியில் காயத்தால் பங்கேற்கவில்லை. நீண்ட நாட்களாகியும் காயத்தால் பார்முக்கு திரும்ப முடியாததை கருத்தில் கொண்ட அவர் தாம் உருவாக்கிய அதிரடி இங்கிலாந்துக்கு தாமே பாரமாக மாறிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் 35 வயதிலேயே அர்ப்பணிப்புடன் ஓய்வு பெற்றுள்ளார். இதை தொடர்ந்து இங்கிலாந்தின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் அல்லது ஜோஸ் பட்லர் ஆகியோர் கேப்டனாக செயல்பட தகுதியானவர்கள் என்று அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கருதினார்கள்.

- Advertisement -

கேப்டன் பட்லர்:
அதில் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளுக்கு பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக இருப்பதால் வெள்ளை பந்துக்கும் கேப்டனாக இருந்தால் பணிச்சுமை ஏற்பட்டுவிடும் என்பதை கருத்தில் கொண்ட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றொரு நம்பிக்கை நட்சத்திர அதிரடி வீரர் ஜோஸ் பட்லரை தங்களது புதிய ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2011இல் இங்கிலாந்துக்கு அறிமுகமான ஜோஸ் பட்லர் தனது அதிரடியான பேட்டிங்கால் நிலையான இடத்தைப் பிடித்து கடந்து 2015 முதல் இயன் மோர்கனுக்கு உதவி புரியும் துணை கேப்டனாக இருந்து வந்தார். இதுவரை 151 ஒருநாள் போட்டிகளிலும் 88 டி20 போட்டிகளிலும் விளையாடி நல்ல அனுபவத்தை பெற்றுள்ள அவர் இனி முழு நேர கேப்டனாக இங்கிலாந்தை வழி நடத்த உள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 7 வருடங்களாக இயன் மோர்கன் தலைமையில் விளையாடியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உத்வேகத்தை கொடுக்கக்கூடிய கேப்டனாக இருந்த அவரது தலைமையில் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவரிடம் நிறைய அம்சங்களை கற்றுள்ள நான் அந்த பாடங்களை இந்த புதிய வேலையில் பயன்படுத்த உள்ளேன்” என்று கூறினார்.

- Advertisement -

கடைசியாக நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் வெறும் 2 போட்டியில் 248 ரன்களை விளாசி 3 – 0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் வெற்றியை பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய ஜோஸ் பட்லர் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக 863 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று முரட்டுத்தனமான பார்மில் உள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக:
ஒரு அதிரடி கேப்டனாக இருக்கும் அவரது தலைமையில் ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி போன்ற வீரர்கள் நிறைந்துள்ளதால் இங்கிலாந்து வழக்கம்போல வலுவான அணியாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட அதிரடியான வீரர்களை வழி நடத்தப் போகும் ஜோஸ் பட்லர் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வரும் ஜூலை 7-ஆம் தேதியன்று சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக துவங்கும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரிலிருந்து தனது பயணத்தை துவங்குகிறார்.

இதையும் படிங்க : IND vs ENG : அவர மட்டும் 30 ரன்னுக்குள்ள அவுட் செய்துவிட்டால் எங்களின் வெற்றி உறுதி – மைக்கேல் வாகன் கருத்து

எனவே அவரது தலைமையிலான அதிரடி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சமாளித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement