இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிகள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
சிக்ஸர்கள் மூலம் சாதனை நிகழ்த்திய ஜாஸ் பட்லர் :
அதோடு இந்த தொடரில் தற்போதைய நிலையில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்கிற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 165 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 45 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்த போட்டியில் 30 பந்துகளை சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 45 ரன்கள் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் நான்காவது வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அது குறித்த தகவல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்று அவர் இந்திய அணிக்கு எதிராக அடித்த மூன்று சிக்சர்களுடன் சேர்த்து சர்வதேச டி20 போட்டியில் 131 போட்டிகளில் விளையாடி 151 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இப்படி சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்களுக்கு மேல் அடித்த நான்காவது வீரராகவும் அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக ரோகித் சர்மா 205 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க : சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்திய திலக் வர்மா – விவரம் இதோ
அவருக்கு அடுத்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரான மார்ட்டின் கப்தில் 173 சிக்ஸர்களுடன் இரண்டாவது இடத்திலும், ஐக்கிய அரபு அமீரக வீரர் முகமது வாசிம் 158 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் வேளையில் தற்போது ஜாஸ் பட்லர் 151 சிக்ஸர்களை விளாசி நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



