குவாலிபயர் போட்டியில் பெங்களூருவை நொறுக்கிய பட்லர் ! புதிய ஐபிஎல் வரலாற்று சாதனை – முழுபட்டியல் இதோ

Jos Buttler vs RCB
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் மே 27-ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அகமதாபாத் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு 20 ஓவர்களில் சுமாராக பேட்டிங் செய்து 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு விராட் கோலி 7 (8) ரன்களில் அவுட்டாக அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் டுப்லஸ்ஸிஸ் மெதுவாக பேட்டிங் செய்து 25 (27) ரன்களில் நடையை கட்டினார்.

Rajat Patidar 58

இருப்பினும் எலிமினேட்டர் போட்டியில் அட்டகாசமான சதமடித்து காப்பாற்றிய இளம் வீரர் ரஜத் படிதார் இம்முறையும் 4 பவுண்டரி 3 சிக்சருடன் அதிகபட்சமாக 58 (42) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அத்துடன் கிளன் மேக்ஸ்வெல் அதிரடியாக பேட்டிங் செய்தாலும் 24 (13) ரன்களில் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் காப்பாற்றுவார் என கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 6 (7) ரன்களில் அவுட்டாகி கைவிட்டார். அந்தளவுக்கு ராஜஸ்தான் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய பிரஸித் கிருஷ்ணா மற்றும் ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

ராஜஸ்தான் வெற்றி:
அதை தொடர்ந்து 158 என்ற சுலபமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு பட்லர் – ஜெய்ஸ்வால் ஜோடி அதிரடியாக 61 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றி உறுதி செய்தது. இதில் ஜெய்ஸ்வால் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (13) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்து மெதுவாக பேட்டிங் செய்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (21) ரன்களிலும் தேவ்தூத் படிக்கல் 9 (12) ரன்களிலும் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் பெங்களூரு பவுலர்களை பிரித்து மேய்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் பட்லர் சரவெடியாக 10 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 106* (60) ரன்கள் விளாசி சூப்பர் பினிசிங் கொடுத்தார்.

Jost Buttler 109

அதனால் 18.1 ஓவர்களிலேயே 161/3 ரன்களை எடுத்த ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மே 29இல் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் குஜராத்தை மீண்டும் சந்தித்து கோப்பைக்காக போராட தயாராகியுள்ளது. மறுபுறம் இந்த முக்கியமான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு பந்துவீச்சிலும் சுமாராக செயல்பட்டு தோல்வியடைந்ததால் பரிதாபமாக வீட்டுக்கு கிளம்பியது. இதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய அந்த அணியின் கனவு மீண்டும் கனவாகவே போனது பெங்களூரு ரசிகர்களின் இதயங்களை நொறுக்கியது.

- Advertisement -

நொறுக்கிய பட்லர்:
ராஜஸ்தானின் இந்த வெற்றியை சதமடித்து எளிதாக்கிய ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வருடம் முதல் போட்டியிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்யும் அவர் முதல் 7 போட்டிகளில் 3 அரை சதங்கள் 3 சதங்கள் உட்பட 400 க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே ஆரஞ்சு தொப்பியை தன் வசமாக்கினார். இருப்பினும் அடுத்த 7 போட்டிகளில் சுமாராக பேட்டிங் செய்தாலும் அவரின் ஆரம்ப கட்ட அதிரடி ஆட்டம் ராஜஸ்தானை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றியது.

Jos Buttler Padikkal

அந்த நிலைமையில் நாக் அவுட் சுற்று தொடங்கியதும் மீண்டும் பார்முக்கு திரும்பிய அவர் முதலில் குஜராத்துக்கு எதிரான குவாலிபயர் 1 போட்டியில் 89 (56) ரன்கள் அடித்து போராடிய போதிலும் ராஜஸ்தான் வெற்றி பெறவில்லை. இருப்பினும் அதை விட நேற்றைய முக்கியமான குவாலிபயர் 2 போட்டியில் சதமடித்து இரு மடங்கு பார்முக்கு திரும்பி ராஜஸ்தான் இறுதிப்போட்டிக்கு செல்வதில் முக்கிய பங்காற்றினார். பைனலுக்கு முன்பாக அவர் இப்படி முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது.

- Advertisement -

வரலாற்று சாதனை:
1. இந்த வருடம் ஏற்கனவே 3 சதங்களை அடித்த அவர் நேற்றைய போட்டியில் அடித்தது 4-வது சதமாகும். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 4 சதங்களை அடித்த முதல் வெளிநாட்டு பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். அத்துடன் ஒரு சீசனில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்தப் பட்டியல் இதோ:
ஜோஸ் பட்லர் : 4* (2022)
விராட் கோலி : 4 (2016)
கிறிஸ் கெயில் : 2 (2011)
ஷேன் வாட்சன் : 2 (2018)
ஷிகர் தவான் : 2 (2020)
டேவிட் வார்னர் : 2 (2016)
கேஎல் ராகுல் : 2 (2021)
ஹாசிம் அம்லா : 2 (2017)

buttler

2. மேலும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த 3-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையும் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 973 (2016)
2. டேவிட் வார்னர் : 848 (2016)
3. ஜோஸ் பட்லர் : 824* (2022)
4. கேன் வில்லியம்சன் : 735 (2018)

- Advertisement -

3. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி சாதனையையும் சமன் செய்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. கிறிஸ் கெயில் : 6
2. விராட் கோலி/ஜோஸ் பட்லர் : 5

இதையும் படிங்க : ஷேன் வார்ன் இந்த விஷயத்தை மேலே இருந்து பார்த்து மகிழ்ச்சி அடைந்திருப்பார் – பட்லர் உருக்கம்

மேலும் இந்த வருடம் அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் போன்ற பல சாதனைகளை படைத்துள்ள அவர் விராட் கோலியின் 973 ரன்கள் சாதனையை உடைப்பதற்கு பைனலில் 150 ரன்கள் தேவைப்படுவதால் அதற்கு சாத்தியமில்லை என்றாலும் பைனலில் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தானுக்கு கோப்பையை வென்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement