
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஃபீல்டிங் துறையில் வீரர்கள் சிறப்பாக செயல்படுவது வெற்றிக்கு இன்றியமையாததாகும். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் கொடுக்கும் கேட்ச்சை ஃபீல்டர்கள் சரியாக பிடிப்பது அவசியம். இல்லையேல் அதைப் பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவித்து வெற்றியைப் பறித்து கேட்ச்சை விட்டதற்காக வருந்த வைத்து விடுவார்கள்.
அந்தளவுக்கு சரியான நேரத்தில் கேட்ச் பிடிப்பது வெற்றியை தலைகீழாக மாற்றக்கூடிய சக்தியை கொண்டது. அதே போல கேப்டன் எவ்வளவு திட்டம் வகுத்தாலும் பவுலர்கள் எவ்வளவு துல்லியமாக பந்து வீசினாலும் சில நேரங்களில் விக்கெட்டுகளே கிடைக்காது. அப்போது துல்லியமாக ஃபீல்டிங் செய்து ரன் அவுட் செய்தால் அது போட்டியை தலைகீழாக மாற்றி வெற்றியை பெற்றுக் கொடுக்கும் தருணமாக அமையும்.
அந்த வகையில் யுவராஜ் சிங், முகமது கைஃப், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்தியாவின் சிறந்த ஃபீல்டர்களாக செயல்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து தற்சமயத்தில் விராட் கோலி தன்னுடைய அற்புதமான ஃபிட்னஸ் பயன்படுத்தி இந்தியாவின் சிறந்த ஃபீல்டராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்றவர்களை விட ரவீந்திர ஜடேஜா நவீன கிரிக்கெட்டில் உலக அளவில் சிறந்த ஃபீல்டராக செயல்படுவதாக தென்னாபிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஃபீல்டர்களாக நான் எப்போதும் ரசித்த 2 வீரர்கள். அவர்கள் இந்தியாவின் சிறந்த 2 ஃபீல்டர்கள். ஆனால் நவீன கிரிக்கெட்டின் சிறந்த ஃபீல்டர் பற்றி பேசும் போது அது கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவாக இருப்பார். அவரை நாம் சர் ஜடேஜா என்று அழைக்கிறோம்”
“அவரை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் ஃபீல்டிங் செய்ய நிறுத்தலாம். அவரை நீங்கள் மிட் விக்கெட், லாங் ஆன் அல்லது ஷார்ட் கவர் போன்ற எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம். அதனாலேயே அவரை நான் சிறந்த ஃபீல்டராக கருதுகிறேன். தன்னுடைய கால்களால் வேகமாக ஓடக்கூடிய அவரிடம் பந்து சென்றாலே பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பயப்படுவார்கள்”
இதையும் படிங்க: 483 ரன்ஸ்.. இலங்கையை மீண்டும் வெளுத்த ஜோ ரூட்.. அலெஸ்டர் குக்கை முந்தி இங்கிலாந்தின் லெஜெண்டாக 3 சாதனை
“எனவே கேட்ச் பிடிக்கிறீர்கள் அல்லது வேகமாக எரிகிறீர்கள் என்பதை தாண்டி நீங்கள் பந்தை எவ்வளவு சீக்கிரமாக நெருங்கி பிடிக்கிறீர்கள் என்பது முக்கியம். அந்த விஷயங்களில் தான் ரவீந்திர ஜடேஜா சிறந்தவர்” என்று கூறினார். அந்த வகையில் வரலாற்றின் மிகச்சிறந்த ஃபீல்டராக கருதப்படும் ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் அவர்களின் பாராட்டை பெறும் அளவுக்கு ரவீந்திர ஜடேஜா அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.