483 ரன்ஸ்.. இலங்கையை மீண்டும் வெளுத்த ஜோ ரூட்.. அலெஸ்டர் குக்கை முந்தி இங்கிலாந்தின் லெஜெண்டாக 3 சாதனை

Joe Root
- Advertisement -

இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து அணி தங்களது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 21ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 427 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 143 ரன்களும் 8வது இடத்தில் களமிறங்கி இலங்கை பவலர்களை வெளுத்து வாங்கிய கஸ் அட்கின்ஷன் சதமடித்து 118 ரன்களும் குவித்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

மீண்டும் வெளுத்த ரூட்:

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை தங்களது பவுலிங் போலவே சுமாராக பேட்டிங் செய்து வெறும் 196 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் 74 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்சன், ஓலி ஸ்டோன், மேத்யூ போட்ஸ், கிறிஸ் ஓக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதன் பின் 231 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு பென் டக்கெட் 24, டான் லாரன்ஸ் 7, கேப்டன் ஓலி போப் 17, ஹரி ப்ரூக் 37, ஜேமி ஸ்மித் 26 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்கவில்லை. ஆனால் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் மட்டும் மீண்டும் அபாரமாக பேட்டிங் செய்து இலங்கை பவுலர்களுக்கு சவாலை கொடுத்து சதமடித்தார். அந்த வகையில் 10 பவுண்டரியுடன் ஜோ ரூட் 103 ரன்கள் எடுத்த உதவியுடன் 2வது இன்னிங்ஸில் 251 ரன்கள் எடுத்த இங்கிலாந்து இப்போட்டியில் இலங்கை வெற்றி பெற 483 என்ற பெரிய இலக்கை நிர்ணயித்துள்ளது.

- Advertisement -

இங்கிலாந்தின் ஜாம்பவானாக ரூட்:

இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசிதா பெர்னாண்டோ, லகிரு குமாரா தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். முன்னதாக இப்போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 34 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் அலஸ்டர் குக் 33 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 15க்கு 0.. 274 ரன்ஸ்.. பாபர் அசாம் சொதப்பல்.. பாகிஸ்தானை சுருட்டிய வங்கதேசம் வரலாற்று வெற்றிக்கு அடித்தளம்

அத்துடன் இலங்கைக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (1293) அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன் அலஸ்டர் குக் 1290 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் அதிக சதங்கள் (லார்ட்ஸ் மைதானத்தில் 7 சதங்கள்) அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனையையும் ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன் இதே லார்ட்ஸ் மைதானத்தில் மைக்கேல் வாகன் மற்றும் கிரகாம் கூச் தலா 6 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement