
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஃபைனலில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது. இருப்பினும் அப்போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சூரியகுமார் யாதவ் பிடித்தது சர்ச்சையாக மாறியது.
குறிப்பாக டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சரியாக பிடித்த சூரியகுமார் பேலன்ஸை இழந்தார். அதனால் பந்தை களத்திற்குள் தூக்கிப் போட்ட அவர் பவுண்டரிக்குள் சென்று விட்டு மீண்டும் வந்து சரியாக கேட்ச் பிடித்து இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுத்தார். ஆனால் அந்த கேட்ச் பிடிக்கும் போது சூரியகுமார் கால் பவுண்டரியில் உரசியதாக பாகிஸ்தான் இலங்கை ரசிகர்கள் விமர்சித்தனர்.
அத்துடன் அந்த கேட்ச் பிடிப்பதற்கு முன்பாகவே இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே பவுண்டரியை சில அடிகள் பின்னோக்கி நகர்த்தி வைத்திருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும் பவுண்டரி குஷன் போட்டியின் போகிற போக்கில் நகர்ந்திருந்ததாகவும் சூரியகுமார் கால்கள் பவுண்டரியில் படவில்லை என்றும் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஷான் பொல்லாக் தெரிவித்திருந்தார்.
எனவே அந்த கேட்ச்சில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் அப்போதே பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் டேவிட் மில்லர் அடித்த பந்து இன்னும் சில மீட்டர்கள் தாண்டி விழுந்திருந்தால் தென்னாப்பிரிக்கா வென்றிருக்கும் என்று ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் கூறியுள்ளார். ஆனால் சூரியகுமார் பிடித்த அபாரமான கேட்ச் தங்களது வெற்றியைப் படித்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“போட்டியை மாற்றக்கூடிய விஷயங்களை செய்யும் எங்களது வீரர்களையும் எதிரணியையும் நான் எப்போதும் மதிக்கிறேன். அங்கே எந்த கேரண்டியும் கிடையாது. அது சிக்ஸராக சென்றிருந்தால் மில்லர் தொடர்ந்து பேட்டிங் செய்து பந்துகளை மைதானத்திற்கு வெளியே அனுப்பியிருப்பார். இருப்பினும் அது கேட்ச்கள் டி20 மேட்ச்களை வென்று கொடுக்கும் என்பதை காட்டியது. அத்தொடரில் இந்தியா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியது. தென்னாபிரிக்கா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை”
இதையும் படிங்க: 160கி.மீ 120 மாதிரி தெரியும்.. சோம்பேறின்னு நினைக்காதீங்க.. ரோஹித் அதுல ஒன்மேன் ஆர்மி.. அம்பயர் சௌத்ரி பேட்டி
“ஆனால் அவர்கள் உண்மையான போராளிகள் என்பதை காண்பித்தனர். இந்தியா தாங்கள் விளையாடிய விதத்தில் டாமினேட் செய்தது. அப்போட்டியில் இரு அணிகளின் வெற்றிகள் 2 மீட்டர் தொலைவில் இருந்தது. அதைத் தாண்டியிருந்தால் போட்டி தென்னாபிரிக்காவுக்கு சாதகமாக மாறியிருக்கும். எனவே அது கலவையான உணர்வுகளை கொடுத்தது. இருப்பினும் அது ஒரு ஃபீல்டிங் பயிற்சியாளர் மற்றும் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புள்ளவரான எனக்கு ஆட்டத்தை மாற்றும் தருணமாக அமைந்ததில் மகிழ்ச்சியடைந்தேன்” என்று கூறினார்.