கற்ற பாடத்தால் தெ.ஆ டி20 அணிக்கு கேப்டனாக டு பிளேஸிஸை அறிவித்த சென்னை, அதிகாரபூர்வ பெயர் – 5 வீரர்களின் பட்டியல் இதோ

Faf
- Advertisement -

ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட வளர்ச்சியை பார்த்து இதர நாட்டு வாரியங்களும் தங்களது நாட்டில் பிரீமியர் லீக் டி20 தொடர்களை நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இணைந்துள்ள தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இந்த வருடம் புதிய பிரீமியர் லீக் டி20 தொடரை உருவாக்கி அதை வரும் 2023இல் ஜனவரியில் நடத்துவதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச டி20 லீக் என்று பெயரிடப்பட்டுள்ள துபாய் டி20 தொடரில் பங்கேற்கும் 6 அணிகளில் 4 அணிகளை வாங்கியுள்ள ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தென்னாபிரிக்கா உருவாக்கியுள்ள டி20 சேலஞ்ச் எனும் புதிய தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் மொத்தமாக வாங்கியுள்ளன.

அதில் 4 கோப்பைகளை வென்று வெற்றிகரமான 2வது ஐபிஎல் அணியாக திகழும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் தொடரில் மட்டும் ஜோகன்னஸ்பர்க் நகரை மையப்படுத்திய அணியை வாங்கியுள்ளது. கடந்த 2007இல் நடைபெற்ற முதல் டி20 உலக கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானை தோற்கடித்த எம்எஸ் தோனி இந்த மைதானத்தில் தான் முதல் உலகக்கோப்பையை வென்று தனது கேப்டன்ஷிப் பயணத்தை துவங்கினார். அதேபோல் 2009இல் இதே மைதானத்தில் தான் சென்னை தனது முதல் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரையும் வென்றது.

- Advertisement -

அதிகாரபூர்வ பெயர்:
அப்படி வரலாற்றில் சென்னை மற்றும் தோனியுடன் நிறைய தொடர்புகளைக் கொண்டிருக்கும் காரணத்தாலேயே இந்தக் குறிப்பிட்ட அணியை அதிக தொகைகளை செலவளித்து வாங்கியுள்ள சென்னை அணி நிர்வாகம் அதற்கு ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் என்ற பெயரை வைத்துள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள அந்த அணி தங்களுக்காக விளையாடப் போகும் முதற்கட்ட 5 வீரர்கள் கொண்ட பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் கேப்டன் பஃப் டு பிளேஸிஸை முதல் வீரராக வாங்கியுள்ள அந்த அணி நிர்வாகம் தங்களது கேப்டனாக நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2011 முதல் 2021 வரை 10 வருடங்களாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக முக்கிய வீரராக விளையாடிய டு ப்ளஸ்ஸிஸ் நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தமிழக ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார். ஆனாலும் இந்த வருடம் நடைபெற்ற ஏலத்தில் அவரை வாங்காமல் சென்னை தவற விட்டதை பயன்படுத்திய பெங்களூரு அணி நிர்வாகம் தங்களது கேப்டனாக நியமித்து பிளே ஆஃப் சுற்று வரை சென்று அசத்தியது. மறுபுறம் அவரை கழற்றி விட்டு ஏலத்திலும் வாங்காமல் கோட்டைவிட்ட சென்னை நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்து.

- Advertisement -

தவறு செய்யமாட்டோம்:
அதனால் தக்க பாடத்தை கற்றுள்ள அந்த அணி மேற்கொண்டு அதே தவறைச் செய்யாது என்று அதன் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கடந்த 10 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியில் டுப்லஸ்ஸிஸ் முதுகெலும்பாக இருந்தார். எங்களுக்கு தொடர்ச்சியாக விளையாடிய அவரை துரதிர்ஷ்டவசமாக கடந்த ஐபிஎல் தொடரில் தேர்வு செய்ய முடியாமல் போய் விட்டது”

“இருப்பினும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் கிடைத்த வாய்ப்பில் அவரை மீண்டும் சூப்பர் கிங்ஸ் குடும்பத்தில் இணைத்துக் கொண்டுள்ளதற்கு மகிழ்ச்சியடைகிறோம். தென் ஆப்பிரிக்க கேப்டனாக செயல்பட்டுள்ள அவர் அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்தவர் என்பதால் எங்களது அணிக்கு நல்ல எதிர்காலம் உள்ளதாக நம்புகிறோம்” என கூறினார்.

அவருடன் கடந்த சில வருடங்களாக சென்னையில் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வரும் இங்கிலாந்தின் ஆல்-ரவுண்டர் மொயின் அலி 2வது வீரராக வாங்கப்பட்டுள்ளார். அதே போல் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அசத்தலாக பந்துவீசிய இலங்கையின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்சனா, வெஸ்ட் இண்டீஸ் இளம் ஆல்-ரவுண்டர் ரோமரியா செஃபார்ட் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் வெறும் 21 வயது மட்டுமே நிரம்பிய இளம் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸியும் வாங்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இப்படி அனுபவமும் இளமையும் கலந்துள்ள வீரர்களை வாங்கப்பட்டுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அத்துடன் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடப் போகும் இறுதிகட்ட முழுமையான அணியும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement