குக் அவசர பட்டாரு ஆனா இவரு சச்சின் சாதனையை உடைக்காம ஓயமட்டார் – அடித்துக்கூறும் வல்லுநர்கள்

Joe Root Sachin Tendulkar
Advertisement

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது புதிய அத்தியாயத்தை வெற்றியுடன் துவங்கியது. அந்த வெற்றிக்கு 2-வது இன்னிங்சில் 115* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகன் விருதை வென்று 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1 – 0* என்ற கணக்கில் தனது அணியை முன்னிலை படுத்தியுள்ளார்.

Joe Root

மேலும் அப்போட்டியில் 115 ரன்கள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 என்னும் மாபெரும் மைல்கள் சாதனையை கடந்த 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் மற்றும் உலக அளவில் 14-வது பேட்ஸ்மேன் என்ற வரலாற்றையும் எழுதினார். மேலும் மிக இளம் வயதில் 10000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை (31 வருடம் 326 நாட்கள்) முறியடித்து அலெஸ்டர் குக் சாதனையை (31 வருடம் 157 நாட்கள்) சமன் செய்தார்.

- Advertisement -

தவறவிட்ட குக்:
கடந்த சில வருடங்களாகவே “பேப் 4” எனப்படும் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களை காட்டிலும் அட்டகாசமாக பேட்டிங் செய்து அவர்களையும் மிஞ்சி 10000 ரன்களை முதல் பேட்ஸ்மேனாக தொட்டுள்ளார். தற்போது 31 வயது மட்டுமே நிரம்பிய இவர் இன்னும் குறைந்தது 5 – 6 வருடங்கள் விளையாடுவார் என்பதால் 15,921 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

cook1

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்த அலஸ்டேர் குக் 2018இல் 161 போட்டிகளில் 12472 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சினின் சாதனையை உடைப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு இருந்தது. ஆனால் 34 வயதிலேயே திடீரென ஓய்வு பெற்ற அவர் அந்த பொன்னான வாய்ப்பை நழுவவிட்டார். இருப்பினும் இன்னும் கவுண்டி சாம்பியன்ஷிப் உள்ளூர் போட்டிகளில் சதமடித்து அவர் விளையாடி வருகிறார்.

- Advertisement -

ஜோ ரூட் விடமாட்டார்:
மேலும் ஆச்சர்யமாக இந்தியாவின் நாக்பூரில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அலெஸ்டர் குக் (2006இல்) மற்றும் ஜோ ரூட் (2012இல்) ஆகியோர் அறிமுகமாகி மிகச் சரியாக 31 வருடம் 157 நாட்களில் 10,000 ரன்களை தொட்டுள்ளது வியப்பை கொடுக்கிறது. இருப்பினும் அலஸ்டேர் குக் தவறவிட்ட பொன்னான வாய்ப்பை ரூட் தவறவிட மாட்டார் என்று பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே தெரிவித்துள்ளார். இதுபற்றி தனது டுவிட்டரில் அவர் பேசியது பின்வருமாறு.

“அலெஸ்டர் குக், கிரேம் ஸ்மித் ஆகிய இருவருக்கும் போதிய நேரம் இருந்ததால் சச்சினின் சாதனையை உடைப்பார்கள் என்று கருதப்பட்டது. அதை அவர்கள் தவற விட்ட நிலையில் தற்போது ஜோ ரூட் அதைச் செய்வார் என்று தோன்றுகிறது. ஏனெனில் இங்கிலாந்தை தவிர வேறு யாரும் அவ்வளவு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது இல்லை”

- Advertisement -

“சச்சினின் சாதனையை உடைப்பார்கள் என்ற தருணத்தில் ஜேக் காலிஸ் 38 வயதை தொட்டார், அலெஸ்டர் குக் 34 வயதிலேயே ஓய்வு பெற்றார், 31 வயதாகும் வில்லியம்சனுக்கு நீண்ட தூரம் உள்ளது. எனவே காயமடையாமல் ஜோ ரூட் அடுத்த 75 போட்டிகளில் விளையாடினால் அதற்கு நல்ல வாய்ப்புள்ளது. அதை 2025இல் பார்ப்போம். மேலும் முரளிதரன் சாதனை (800 விக்கெட்) மட்டுமே தற்போது பாதுகாப்பாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

root

அதேபோல் சச்சினின் சாதனையை ஜோ ரூட் கண்டிப்பாக காலி செய்வார் என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “என்னைப் பொறுத்தவரை ஜோ ரூட் இங்கிலாந்தின் கிரகாம் கூச் போல மிகச் சிறந்த பேட்ஸ்மேன். அவர் விளையாடும் ஆட்டத்தைப் பார்த்தால் சச்சினின் அதிக ரன்கள் சாதனையை முந்துவதற்கு வாய்ப்புள்ளது. அவர் இன்னும் 6000 ரன்கள் பின்தங்கியிருந்தாலும் 31 வயது மட்டுமே நிரம்பியுள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 வயது வரை விளையாடும்போது அவரும் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அந்த அளவுக்கு பேட்டிங்கை விரும்பி செய்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க : 3 மேட்ச்லயே உலககோப்பை சான்ஸ் கொடுத்துட்டாரு, கேப்டன் தோனி பற்றி நெகிழும் நட்சத்திர வீரர்

கடந்த 2017 முதல் கேப்டனாக இருந்து வந்த ஜோ ரூட் சிறப்பாக ரன்கள் அடித்த போதிலும் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததால் சமீபத்தில் அந்த பதவியிலிருந்து விலகினார். எனவே தற்போது கேப்டன்ஷிப் அழுத்தமின்றி சுதந்திரப் பறவையாக விளையாட துவங்கியுள்ள அவர் நிச்சயமாக சச்சினின் சாதனையை உடைப்பதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது என்றே கூறலாம்.

Advertisement