முரட்டு பார்மில் மீண்டும் சதமடித்த ஜோ ரூட் ! ரன்களை மழையாக பொழிந்து கவாஸ்கரை முந்தி புதிய சாதனை

Joe Root Sunil Gavaskar
- Advertisement -

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்து அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் லண்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது புதிய டெஸ்ட் பயணத்தை வெற்றியுடன் துவக்கி 1 – 0* (3) என தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூன் 10-ஆம் தேதியன்று டிரென்ட் பிரிட்ஜ் நகரில் துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்து 553 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிக பட்சமாக மிடில் ஆர்டரில் அசத்திய டார்ல் மிட்சேல் இரட்டை சதத்தை நழுவ விட்டாலும் 190 ரன்கள் விளாச அவருடன் பேட்டிங் செய்த டாம் ப்ளன்டல் சதம் அடித்து 106 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

கலக்கும் ரூட்:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 4 ரன்களில் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரர் லீஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்ததாக களமிறங்கிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் மற்றும் ஓலி போப் ஆகியோர் ஜோடி சேர்ந்து நியூசிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறி அற்புதமாக பேட்டிங் செய்தனர். அதில் ஓலி போப் சதமடித்து 145 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக பேட்டிங் செய்த ஜோ ரூட் 21 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 176 ரன்களில் அவுட்டானார்.

அவருடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 46, பென் போக்ஸ் 56 என அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்கள் எடுத்ததால் முதல் இன்னிங்சில் 539 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்டானது. அதைத் தொடர்ந்து 14 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து தனது 2-வது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. இன்னும் ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டி டிராவில் முடிவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

முரட்டு பார்ம் ரூட்:
முன்னதாக இந்தப் போட்டி மட்டுமல்லாது லண்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் சதமடித்து 115 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட ஆட்டநாயகன் விருது வென்ற ஜோ ரூட் கடந்த 2 வருடங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் மழையாக ரன்களை பொழிந்து வருகிறார் என்றே கூறலாம். அதிலும் கடந்த 2021க்கு பின் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற இதர உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மென்கள் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திணறும் நிலையில் இவர் மட்டும் மெசினை போல் 10 சதங்களை அடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் அவர்களைக் காட்டிலும் முதல் ஆளாக 10000 ரன்களை கடந்த அவர் அந்த மைல்கல்லை தொட்ட 2-வது இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற சாதனையை கடந்த போட்டியில் படைத்தார். அந்த நிலைமையில் இப்போட்டியில் சதமடித்த அவர் தற்போது ஓய்வு பெறாமல் விளையாடும் வீரர்களில் அதிக சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் சாதனையை சமன் செய்தார். அந்தப் பட்டியல் இதோ:
1. ஜோ ரூட்/ஸ்டீவ் ஸ்மித்/விராட் கோலி : தலா 27 சதங்கள்
2. கேன் வில்லியம்சன்/டேவிட் வார்னர் : தலா 24 சதங்கள்

- Advertisement -

கவாஸ்கரை முந்தி:
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. ஜோ ரூட் : 16*
2. அலெஸ்டர் குக் / இயன் பெல் / கெவின் பீட்டர்சன் / கிரகாம் கூச் : தலா 15 சதங்கள்

அதைவிட இப்போட்டியில் 176 ரன்கள் எடுத்த அவர் 10191* ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த 12-வது பேட்ஸ்மேன் என்ற இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கரை (10,122 ரன்கள்) முந்தி புதிய சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க : உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஏலம் போன ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் ! வாங்கியது யார் – 3வது நாள் வேற இருக்கு

தற்போது 31 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் 10000 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சச்சினின் சாதனையை முந்தி அலஸ்டர் குக் உலக சாதனையை சமன் செய்தார். இன்னும் குறைந்தது 4 – 5 வருடங்கள் விளையாடுவார் என்று நிலைமையில் தற்போது முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் அவர் அடுத்தடுத்து சதங்களையும் ரன்களையும் விளாசுவதை பார்த்தால் 15,921 ரன்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனை படைத்துள்ள இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தி விடுவாரோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement