உசுப்பேத்தியே கெடுத்துட்டாங்க.. உங்களோட இயற்கையான ஆட்டத்தை ஆடுங்க.. நட்சத்திர வீரருக்கு ஏபிடி கோரிக்கை

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற அந்த அணி 3வது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து அவமான சாதனை படைத்தது.

இந்த தோல்விக்கு சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாகவே விளையாடுவோம் என்று ஒற்றைக் காலில் நிற்கும் இங்கிலாந்தின் அணுகுமுறை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடுவோம் என்ற பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி ரன்கள் குவிக்க முயற்சிக்கும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களுடைய விக்கெட்டை பரிசளித்து வருகின்றனர்.

- Advertisement -

ஏபிடி கோரிக்கை:
அதிலும் குறிப்பாக ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் குவித்த அனுபவத்தைக் கொண்ட ஜோ ரூட் கடந்த போட்டியில் பும்ராவுக்கு எதிராக குழந்தைத்தனமாக ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து தன்னுடைய விக்கெட்டை கொடுத்தது இங்கிலாந்தின் தோல்விக்கு காரணமானது. அதனால் இந்திய ரசிகர்களே நன்றாக விளையாடிய ஜோ ரூட்டை அதிரடியாக விளையாடுங்கள் என்று உசுப்பேற்றியே கெடுத்து விட்டதாக பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் பஸ்பால் ஆட்டத்தை கைவிட்டு யாருடைய பேச்சையும் கேட்காமல் ஜோ ரூட் தம்முடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று தென்னாபிரிக்க ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ரூட்டுக்கு எதிராக விளையாடிய போது அவர் மகத்தான டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று நான் கருதினேன்”

- Advertisement -

“ஆனால் தற்போது அது பஸ்பால் ஆட்டத்தால் மாறியுள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடினமாக விளையாட முயற்சிப்பவர்கள் தான் அவுட்டாக்க கடினமாக இருப்பார்கள். இருப்பினும் தற்போது அவர் தன்னுடைய சாதாரண ஆட்டத்திலிருந்து வெளியே வந்து ரிவர்ஸ் ஸ்வீப் அடித்து அவுட்டாகிறார். அது எனக்கு பிடிக்கவில்லை. எனவே ரூட் போன்றவர்களிடம் நீங்கள் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுங்கள் என்று சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: இந்தியா – இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் நடைபெறும் ராஞ்சி மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் ரிப்போர்ட்

“குறிப்பாக பென் டுக்கெட் அல்லது பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை அதிரடியாக வையுங்கள். ரூட்டை நீண்ட நேரம் இயற்கையாக பேட்டிங் செய்ய விடுங்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலிக்கு நிகரான தரத்தை கொண்ட ஜோ ரூட் தனது இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பமாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement