
இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் ஜிம்பாப்பே 4 நாட்கள் கொண்ட ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அந்தப் போட்டி மே 22ஆம் தேதி நாட்டிங்கம் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு எதிர்பார்த்ததைப் போலவே துவக்க வீரர்கள் பென் டக்கெட் – ஜாக் கிராவ்லி சிறப்பாக விளையாடினார்கள்.
மறுபுறம் ஜிம்பாப்வே பவுலர்கள் எதிர்பார்த்ததைப் போலவே சுமாராக பௌலிங் செய்தனர். அதைப் பயன்படுத்தி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடிய அந்த ஜோடி அரை சதத்தை அடித்து அசத்தியது. அந்த ஜோடியில் நேரம் செல்ல செல்ல ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து நொறுக்கிய டக்கெட் சதத்தை அடித்து 20 பௌண்டரி 2 சிக்சருடன் 140 (134) ரன்கள் குவித்து அவுட்டானர்.
அவருடன் சேர்ந்து 231 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக விளையாடிய ஜாக் கிராவ்லி தம்முடைய பங்கிற்கு சதத்தை அடித்து 124 (171) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அதற்கடுத்ததாக ஓலி போப் தம்முடைய பங்கிற்கு ஜிம்பாப்வே பவுலர்களை அடித்து வெளுத்து வாங்கினார். அவருடன் ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 3வது விக்கெட்டுக்கு 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 34 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
இந்த ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 13000 ரன்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,000 ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து பேட்ஸ்மேனாக ஜோ ரூட் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்ததாக அந்தப் பட்டியலில் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் 12472 ரன்கள் அடித்து 2வது இடத்தில் உள்ளார்கள்.
இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன்களின் பட்டியலில் ஜோ ரூட் நுழைந்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 15921
2. ரிக்கி பாண்டிங்: 13378
3. ஜேக் காலிஸ்: 13289
4. ராகுல் டிராவிட்: 13288
5. ஜோ ரூட்: 13000*
இதையும் படிங்க: 236 ரன்ஸ் அதிகம்.. லக்னோவிடம் தோற்க இதான் காரணம்.. பிளே ஆஃப் முன்னாடி இதை செஞ்சாகனும்.. கில் பேட்டி
அதனால் 34 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் சச்சின் டெண்டுல்கரின் ஆல் டைம் சாதனையை உடைக்க நெருங்கி வருவது இந்திய ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அதிரடியாக விளையாடிய போப் சதத்தை அடித்தும் ஓயாமல் 169* ரன்கள் எடுத்தார். அதனால் முதல் நாள் முடிவில் 498/3 ரன்களை எடுத்துள்ள இங்கிலாந்துக்கு களத்தில் எதிர்ப்புறம் ஹரி ப்ரூக் 9* ரன்களுடன் இருக்கிறார்.