பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறும் தருவாயில் உள்ளது. அக்டோபர் 7ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151, அப்துல்லா ஷபிக் 102, ஆகா சல்மான் 104* ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து ஃபிளாட்டான பிட்ச்சில் பாகிஸ்தான் போதுமென்று சொல்லும் அளவுக்கு அடித்து நொறுக்கி 823-7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஹரி ப்ரூக் 317, ஜோ ரூட் 262 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாய்ம் ஆயுப், நாசீம் ஷா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
ரூட் சாதனைகள்:
அதன் பின் 227 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய பாகிஸ்தான் போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சுமாராக விளையாடும் அந்த அணி 4வது நாள் முடிவில் 152-6 ரன்கள் எடுத்து இன்னும் இங்கிலாந்தை விட 115 ரன்கள் பின்தங்கியுள்ளது. பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு களத்தில் ஆகா சல்மான் 41*, அமீர் ஜமால் 27* ரன்களுடன் உள்ளனர்.
முன்னதாக இந்தப் போட்டியையும் சேர்த்து ஜோ ரூட் 6வது இரட்டை சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்காக 2வது அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற அலெஸ்டர் குக் (5) சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் வாலி ஹாமோத் 7 இரட்டை சதங்களுடன் உள்ளார். உலகளவில் 5வது அதிக இரட்டை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
ஆசியாவின் கிங்:
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், அட்டபட்டு, வீரேந்திர சேவாக், கேன் வில்லியம்சன், ஜாவேத் மியான்தத், யூனிஸ் கான், ரிக்கி பாண்டிங் ஆகியோரும் தலா 6 இரட்டை சதங்கள் அடித்துள்ளனர். அத்துடன் பாகிஸ்தானுக்கு எதிராக 2 முறை 250க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற இந்தியாவின் வீரேந்திர சேவாக் சாதனையையும் ரூட் சமன் செய்துள்ளார்.
இதையும் படிங்க: அதுக்காக தான் சக்ரவர்த்தியை பிளானோட கம்பீர் வரவெச்சுருக்காரு.. அவரையும் மறக்காதீங்க.. ஆகாஷ் சோப்ரா
சேவாக், ரூட் ஆகிய இருவருமே பாகிஸ்தானுக்கு எதிராக 2 முறை 250+ ரன்கள் அடித்துள்ளனர். மேலும் இலங்கை மற்றும் இந்தியாவில் ஏற்கனவே ரூட் 2 இரட்டை சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளில் தலா 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற அற்புதமான சாதனையும் ஜோ ரூட் படைத்துள்ளார். அது போக இங்கிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையும் ரூட் நிகழ்த்தியுள்ளார்.



