வங்கதேசத்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியுள்ள இந்தியா சவால் விட்ட வங்கதேசத்துக்கு பதிலடி கொடுத்துள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் சுமார் 3 வருடங்கள் கழித்து இந்திய அணிக்காக மீண்டும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.
குறிப்பாக 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக சிறப்பாக விளையாடிய அவர் 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதனால் அந்த அணியில் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றதும் வருண் சக்கரவர்த்தியை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார் என்றே சொல்லலாம். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
கம்பீர் திட்டம்:
அதே போல 2வது போட்டியிலும் அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை எடுத்தார். இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையில் விளையாட வைப்பதற்காகவே கௌதம் கம்பீர் மீண்டும் வருண் சக்கரவர்த்தியை கொண்டு வந்துள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதற்காக மற்றொரு ஸ்பின்னர் சஹாலை இந்திய அணி மறந்து விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “3 வருடங்கள் கழித்து வருண் சக்கரவர்த்தி மீண்டும் வந்துள்ளார் என்பது மிகப்பெரிய கேள்வி. முதல் போட்டியில் சுமாரான பந்துகளிலும் அவர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அது நல்லது. ஆனால் இரண்டாவது போட்டியில் முதல் போட்டியை விட அவர் நன்றாக பந்து வீசினார். முன்பை விட தற்போது அவர் தன்னம்பிக்கையுடனும் தொடர்ச்சியாகவும் அசத்தலாக பந்து வீசுகிறார்”
சஹாலை மறந்துடாதீங்க:
“தொடர்ச்சியாக அவர் 3 ஸ்டம்ப் லைனில் பந்து வீசினார். அது நல்ல அறிகுறி. ஆனால் தற்போது ஏன் நீங்கள் வருண் சக்கரவர்த்தி விளையாட வேண்டும்? ஏனெனில் அடுத்த டி20 உலகக் கோப்பை இந்தியாவில் தான் நடைபெற உள்ளது. அதே சமயம் யுஸ்வேந்திர சஹால் இந்திய அணியின் திட்டங்களில் இருக்க வேண்டும். 33 வயதில் வருண் சக்கரவர்த்தி இருந்தால் அவரும் ஏன் இருக்கக்கூடாது?”
இதையும் படிங்க: பெவன் மாதிரி ரிங்கு.. உ.கோ ஜெய்க்கலனாலும் கம்பீர் இதை செய்வாரு.. இந்தியாவிடம் பாக் கத்துக்கனும்.. பசித் அலி
“ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பையில் தேர்ந்தெடுத்த நீங்கள் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கவில்லை. எனவே அவர் எந்தத் தவறும் செய்யவில்லை. கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் அவர் நன்றாகவே செயல்பட்டார். இருப்பினும் அவருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்கவில்லை. இப்போதும் அவருக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று காரணம் என்னவென்று உனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.



