வங்கதேசத்துக்கு எதிராக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 41-3 என தடுமாறி கடைசியில் 221-9 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74, ரிங்கு சிங் 53 ரன்கள் குவித்து 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர்.
அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசத்தை 20 ஓவரில் 135-9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இந்தியா வென்றது. வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக முகமதுல்லா 4 விக்கெட்டுகள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 2, நித்திஷ் ரெட்டி 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் வெற்றியையும் சேர்த்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே இந்தியா வென்றுள்ளது.
மைக்கேல் பெவன் மாதிரி:
இந்நிலையில் ரிங்கு சிங் ஆஸ்திரேலிய ஜாம்பவான் மைக்கேல் பெவன் போல இடதுகை பேட்ஸ்மேனாக முக்கிய நேரங்களில் அசத்துவதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி பாராட்டியுள்ளார். அவருக்கு கௌதம் கம்பீர் போதுமான ஆதரவு கொடுப்பதாக தெரிவிக்கும் பசித் அலி இந்தியா தங்களுடைய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து சரியாக பயன்படுத்துவதாகவும் பாராட்டியுள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் அணியில் சுமாராக செயல்படும் வீரர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து வாய்ப்பளிப்பது தோல்வியை கொடுப்பதாகவும் பசித் அலி ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நித்திஷ் ரெட்டி அடித்த சிக்ஸர்களை சரவெடி என்றே அழைக்க வேண்டும். அவருடன் விளையாடிய ரிங்கு சிங் மொத்தத்தில் மைக்கேல் பெவன்”
இந்தியாவிடம் கத்துக்கோங்க:
“அவர்களை வைத்து கம்பீர் சிந்தித்தது வெற்றியை கொடுத்துள்ளது. கௌதம் கம்பீர் நேரடியாக உலகக் கோப்பையை வெல்வார் என்று நான் சொல்ல மாட்டேன். ஒருவேளை தோற்றாலும் அவர் தன்னுடைய வீரர்களுக்கு ஆதரவு கொடுப்பதை நிறுத்த மாட்டார். ஏனெனில் அவர் தனக்கான வீரர்களை தேர்ந்தெடுத்து சிறந்த அணியை எடுத்துக்காட்டாக விளையாட வைக்கிறார்”
இதையும் படிங்க: சொல்ல வார்த்தையில்ல.. சுதந்திர இந்தியாவின் அந்த 10 பேரில் ரத்தன் டாடா டாப்ல இருப்பாரு.. கபில் தேவ் புகழஞ்சலி
“இது போன்ற சிந்தனை செயல்முறை தான் பாகிஸ்தான் அணியில் இல்லை. சுப்மன் கில், ஜெய்ஸ்வால் போன்றவர்களுக்கு இந்தியா ஓய்வு கொடுத்துள்ளது. ஆனால் எங்கள் அணியில் யாருக்கும் ஓய்வு கொடுப்பதில்லை. எனவே இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் அணி இது போன்ற எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



