இந்திய தொழில்துறையின் ஜாம்பவானாக போற்றப்படும் ரத்தன் டாடா அவர்கள் நேற்று உடல்நிலை குறைவால் 86 வயதில் காலமானார். டாடா குழுமத்தின் தலைவராக 21 வருடங்கள் பணியாற்றிய அவர் பல நிறுவனங்களை உருவாக்கினார். அதன் வாயிலாக இந்திய தொழில்துறை உலகளவில் உச்சம் தொடுவதற்கு முக்கிய பங்காற்றிய ரத்தன் டாடா 2021இல் வயது காரணமாக ஓய்வு பெற்றார்.
தம்முடைய வருமானத்தில் பெருமளவு தொகையை அறக்கட்டளையின் வாயிலாக அவர் ஏழைகளின் மருத்துவம், கல்வி போன்றவற்றுக்கு அள்ளிக் கொடுத்தார். அத்துடன் லாக் டவுன் வந்த போது கோடி கணக்கில் அவர் ஏழை மக்களுக்காக பணத்தை வாரி வழங்கினார். அதனாலேயே அம்பானி, அதானி போன்ற இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் டாடா அவர்கள் எப்போதும் இடம் பெற்றதில்லை.
மக்கள் இதயங்களில் டாடா:
அதே போல கிரிக்கெட் பிரியரான ரத்தன் டாடா நிறைய இந்திய வீரர்களுக்கும் மறைமுகமாக உதவியுள்ளார். குறிப்பாக ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், அஜித் அகர்கர் போன்றவர்கள் டாடா குழுமத்தில் உள்ள டாடா ஸ்டீல், டாடா பவர் போன்ற நிறுவனங்களின் வாயிலாக ஸ்பான்சர்ஷிப் பெற்று கிரிக்கெட்டில் வளரத் துவங்கினர். அந்த வகையில் கொடை வள்ளலாக எளிமை மனிதராக வாழ்ந்த டாடா அவர்கள் மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து விடை பெற்றுள்ளார்.
அவருடைய மறைவால் சோகமடைந்துள்ள கோடிக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதே போல சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பல இந்திய ஜாம்பவான் வீரர்களும் புகழஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில் 1948 சுதந்திரத்திற்கு பின் இந்தியா வளர்வதற்கு முக்கிய பங்காற்றிய 10 நபர்களை தேர்ந்தெடுத்தால் அதில் டாடா முதலிடத்தில் இருப்பார் என்று ஜாம்பவான் கபில் தேவ் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கபில் தேவ் புகழஞ்சலி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் சுதந்திரம் பெற்ற பின் 10 நபர்களை தேர்ந்தெடுத்தால் அதில் டாடா அவர்கள் மேலே இருப்பார். அவர் அது போன்ற நபர். ஒரு தொழில்துறை எப்படி உருவாக்கப்பட வேண்டும் என்ற எடுத்துக்காட்டை அவர் உருவாக்கினார். அவர் தமக்காக மட்டுமல்லாமல் மொத்த நாட்டிற்காகவும் தம்முடைய நிறுவனங்களை உருவாக்கினார்”
இதையும் படிங்க: 454 ரன்ஸ்.. சேவாக்கின் 20 வருட சாதனையை உடைத்த ஹரி ப்ரூக்.. ரூட்டுடன் சேர்ந்து புதிய உலக சாதனை
“அவரை பலமுறை நான் சந்தித்துள்ளேன். மிகவும் நகைச்சுவையாக பேசக்கூடிய அவர் செல்லப் பிராணிகளை விரும்புவார். அது அவர் எந்தளவுக்கு மனிதாபிமானம் மிக்கவர் என்பதை காண்பிக்கிறது. மனிதாபிமானமும் பணிவும் தான் அவரை உருவாக்கியது. நீங்கள் எப்போதும் நல்லவர்களை நினைவில் வைத்துக் கொள்வீர்கள். டாடா அவர்கள் நாட்டுக்காக என்ன செய்தார் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என்று கூறினார்.



