- Advertisement -
உலக கிரிக்கெட்

ராக்கெட் வேகம் ! ஒரே வருடத்தில் விராட், வில்லியம்சன், ஸ்மித்துக்கு டாட்டா காட்டிய ரூட் – அசத்தும் புள்ளிவிவரம்

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெற்று வரும் இந்த தொடரில் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்துள்ள கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்தை தோற்கடித்தது. மேலும் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையில் தனது டெஸ்ட் பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. அந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் சதமடித்து 115* ரன்கள் விளாசிய முன்னாள் கேப்டன் ஜோ ரூட் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்று 1 – 0* என தனது அணியை முன்னிலைப் படுத்தினார்.

கடந்த 2012இல் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் ஆரம்ப காலங்களில் சாதாரண பேட்ஸ்மேன்களை போல் இருந்தாலும் வருடங்கள் செல்ல செல்ல சிறப்பாக பேட்டிங் செய்து இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அட்டகாசமாக பேட்டிங் செய்த இவர் இங்கிலாந்தின் கேப்டனாகி அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனையும் படைத்தார். இருப்பினும் அவரின் தலைமையில் வெற்றிக்கு ஈடாக தோல்வியை சந்தித்ததால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோ ரூட் தற்போது சுதந்திர பறவையாக அழுத்தமின்றி பேட்டிங் செய்ய துவங்கியுள்ளார்.

- Advertisement -

டாட்டா காட்டிய ரூட்:
மேலும் நவீன கிரிக்கெட்டில் உலகின் அனைத்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை மலைபோல குவித்த இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு நிகராக பேட்டிங்கில் உலகத்தரம் வாய்ந்த வீரராக உருவெடுத்த இவரை ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் “ஃபேப் 4” பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றி வருகின்றனர். ஒரு கட்டத்தில் இந்த 4 பேட்ஸ்மேன்களுமே போட்டி போட்டுக் கொண்டு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்ததால் ஒட்டுமொத்த உலகமும் இவர்களில் யார் முதலில் 10000 ரன்கள் என்ற மாபெரும் மைல்கள் சாதனையை தொட போகிறார்கள் என்று பார்க்கத் துவங்கியது.

அந்த நிலைமையில் கடந்த ஜனவரி 13, 2021 தேதியில் இந்த நால்வருமே ஏறக்குறைய 7000க்கும் மேற்ப்பட்ட ரன்களுடன் பந்தயத்தில் சரி சமமாக இருந்தனர். அந்த புள்ளிவிவரம் இதோ:
1. ஜோ ரூட் : 7823 ரன்கள், 17 சதங்கள்
2. ஸ்டீவ் ஸ்மித் : 7449 ரன்கள், 27 சதங்கள்
3. விராட் கோலி : 7318 ரன்கள், 27 சதங்கள்
4. கேன் வில்லியம்சன் : 7115, 24 சதங்கள்

- Advertisement -

ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் முன்னோக்கிப் பார்க்கும் போது விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் ஆகிய அனைவரை காட்டிலும் பந்தயத்தில் ராக்கெட் வேகத்தில் பறந்த ஜோ ரூட் கிட்டத்தட்ட ஒரே வருடத்தில் 2500 ரன்களை விளாசி 10000 ரன்கள் பந்தயத்தில் அவர்களுக்கு டாட்டா காட்டி முதலாவதாக அந்த மாபெரும் சாதனையை தொட்டு அசத்தியுள்ளார்.

அதேபோல் இந்த காலகட்டத்தில் எஞ்சிய மூவரை காட்டிலும் 9 சதங்களை அடித்துள்ள அவர் அந்த 3 பேரை காட்டிலும் நான் சிறந்தவன் என்று நிரூபித்துள்ளார். அந்த புள்ளி விவரம் இதோ:
1. ஜோ ரூட் : 10015 ரன்கள், 26 சதங்கள்
2. விராட் கோலி : 8043 ரன்கள், 27 சதங்கள்
3. ஸ்டீவ் ஸ்மித் : 8010 ரன்கள், 27 சதங்கள்
4. கேன் வில்லியம்சன் : 7289 ரன்கள், 24 சதங்கள்

- Advertisement -

இன்னும் விரிவாக பார்த்தோமேயானால் ஜனவரி 12, 2021க்கு பின் ஜோ ரூட் 9 சதங்கள் உட்பட 2192 ரன்களைக் குவித்துள்ளார். ஆனால் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய மூவரும் சேர்ந்து ஒரு சதங்கள் கூட அடிக்காமல் வெறும் 1460 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர். அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் அறிமுகத்திற்கு பின் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1. ஜோ ரூட் : 10015
2. ஸ்டீவ் ஸ்மித் : 7751
3. விராட் கோலி : 7255
4. டேவிட் வார்னர் : 6957
5. கேன் வில்லியம்சன் : 6241

சச்சினின் சாதனை:
மொத்தத்தில் நவீன டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்றவர்களை காட்டிலும் ஜோ ரூட் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருவது இதிலிருந்து தெரிகிறது. மேலும் 31 வயது மட்டுமே நிரம்பியுள்ள இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இளம் வயதில் 10000 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சச்சினின் சாதனையை முந்தி அலஸ்டேர் குக் சாதனையையும் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : குக் அவசர பட்டாரு ஆனா இவரு சச்சின் சாதனையை உடைக்காம ஓயமட்டார் – அடித்துக்கூறும் வல்லுநர்கள்

இன்னும் குறைந்தது 5 – 6 வருடங்கள் இவர் நிச்சயமாக விளையாடுவார் என்பதால் 15,921 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்த இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடிக்க பிரகாசமான வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by