ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரில் 4 போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 3 – 1* (5) என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்தை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இருப்பினும் 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் ஒரு வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
அந்த நிலையில் கடைசிப்போட்டி ஜனவரி 4ஆம் தேதி சிட்னியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 16, பென் டக்கெட் 27, ஜேக்கப் பெத்தல் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதனால் 57/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடத் தொடங்கினார்.
ஜோ ரூட் அசத்தல்:
அவருடன் சேர்ந்த ஹாரி ப்ரூக் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது ப்ரூக் 84 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் அரை சதம் அடித்திருந்த ரூட் நேரம் செல்ல க்ளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி தம்முடைய 41வது சதத்தை அடித்தார்.
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 3வது அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார். அவர்கள் இருவருமே தலா 41 சதங்கள் அடித்துள்ளார்கள். முதல் 2 இடங்களில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (51), தென் ஆப்பிரிக்காவின் ஜேக் காலிஸ் (45) உள்ளார்கள். அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டக் அவுட்டானார்.
ஆபத்தில் சச்சின் சாதனை:
அதைத்தொடர்ந்து வந்த ஜேமி ஸ்மித் நிதானமாக விளையாட முயற்சித்த போதிலும் 46 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 27 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபுறம் ஆஸ்திரேலியாவுக்கு சவாலாக விளையாடிய ஜோ ரூட் 15 பவுண்டரியுடன் 160 ரன்கள் குவித்து ஒரு வழியாக அவுட்டானார். இறுதியில் இங்கிலாந்தை 384 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மைக்கல் நீசர் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இதையும் படிங்க: இதை அவங்களே செய்வாங்க.. டி20 உ.கோ அணியில் ராணாவை தேர்வில் ஒரு பிரச்சனை இருக்கு.. ஏபிடி அதிருப்தி
இந்தப் போட்டியில் எடுத்த ரன்களையும் சேர்த்து ஜோ ரூட் 13937 ரன்களை குவித்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை உடைக்க அவருக்கு வெறும் 2000க்கும் குறைவான ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. அந்தப் பட்டியல்:
1. சச்சின் டெண்டுல்கர்: 15921
2. ஜோ ரூட்: 13937*
3. ரிக்கி பாண்டிங்: 13378



