
ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 21ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹாரி ப்ரூக் 52, ஓலி போப் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை எடுத்தார்.
அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை சிறப்பாக பந்து வீசிய இங்கிலாந்து 132 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 26, கேமரூன் க்ரீன் 24 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் 40 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 164 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 37, ஓலி போப் 33 எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு மிட்சேல் ஸ்டார்க் 3, ப்ரெண்டன் டோகட் 3, ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். இறுதியில் இந்தப் போட்டியில் 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடுகிறது. அதனால் இப்போட்டியில் வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்த்து காணப்படுகிறது.
முன்னதாக இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜாம்பவானாக போற்றப்படும் ஜோ ரூட் பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அதிக ரன்கள் குவித்துள்ள அவர் இன்னும் சில வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சச்சின் டெண்டுல்கரை முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜோ ரூட் உலக சாதனை படைப்பார் என்று பலரும் கணித்துள்ளார்கள்.
அந்த சூழ்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 13500+ ரன்கள் அடித்துள்ள ஜோ ரூட் சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் தம்முடைய வாழ்நாளில் ஒருமுறை கூட சதத்தை அடித்ததில்லை. அதனால் சந்தித்து வரும் விமர்சனங்களையும் கிண்டல்கள்ளையும் அவர் இத்தொடரில் முறியடிப்பார் என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் மிட்சேல் ஸ்டார்க்கிடம் டக் அவுட்டான அவர் 2வது இன்னிங்ஸில் 8 ரன்னில் போல்டானார்.
இதையும் படிங்க: ஆஸிக்கு 205 ரன்ஸ் இலக்கு.. இங்கிலாந்துக்கு எதிராக.. ஸ்டீவ் ஸ்மித் பெஸ்ட் ஃபீல்டராக உலக சாதனை சமன்
இதையும் சேர்த்து இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் 2013 முதல் விளையாடிய 29 இன்னிங்ஸில் ஜோ ரூட்டால் சதமடிக்க முடியவில்லை. இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்காமலேயே அதிக இன்னிங்ஸ் விளையாடிய பேட்ஸ்மேன் என்ற பரிதாபமான மோசமான உலக சாதனையை ரூட் படைத்துள்ளார். அந்தப் பட்டியல் (இன்னிங்ஸ்):
1. ஜோ ரூட் (இங்கிலாந்து): 29*
2. திலிப் வெங்சர்க்கார் (இந்தியா): 28
3. டாம் ஹாய்வார்ட் (இங்கிலாந்து): 25