
இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் பென் டக்கெட் 94, ஜாக் கிராவ்லி 84 ரன்கள் அடித்து இங்கிலாந்துக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். அடுத்ததாக ஜோ ரூட் நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் அரை சதத்தை அடித்த ஓலி போப் 71 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அவரை அவுட்டாக்கிய சுந்தர் அடுத்ததாக வந்த ஹாரி ப்ரூக்கை 3 ரன்னில் காலி செய்தார்.
ஆனால் இந்தப் பக்கம் தொடர்ந்து சுமாராக பவுலிங் செய்த இந்தியாவை சிறப்பாக எதிர்கொண்ட ரூட் சதத்தை அடித்து அசத்தினார். இதையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் மட்டும் 9 சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் ஒரு அணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரூட் படைத்துள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலிய ஜாம்பவான் சர் டான் பிராட்மேன் இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 8 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. இது போக தங்களுடைய சொந்த மண்ணில் அனைத்து அணிகளுக்கு எதிராகவும் ரூட் 23 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தங்களுடைய சொந்த மண்ணில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரூட் சமன் செய்துள்ளார்.
இதற்கு முன் இலங்கையில் மகிளா ஜெயவர்த்தனே, தென்னாப்பிரிக்காவில் ஜாக் காலிஸ், ஆஸ்திரேலியாவில் ரிக்கி பாண்டிங் ஆகியோரும் தலா 23 சதங்கள் அடித்துள்ளார்கள். இது போக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை உடைத்துள்ள ரூட் புதிய சாதனை படைத்துள்ளார். ரிக்கி பாண்டிங் 13378 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரூட் தற்போது 13380 ரன்களுடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதையும் படிங்க: 4 விக்கெட்ஸ் 60 ஓவர்ஸ்.. தமிழக வீரரை குறைத்து மதிப்பிட்ட கில் தவறை விளாசிய ப்ராட்.. 13 பந்தில் நிரூப்பித்த சுந்தர்
15921 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரூட் சில வருடங்களில் உடைக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவருடைய சிறந்த ஆட்டத்தால் 3வது நாள் தேனீர் இடைவெளியில் இங்கிலாந்து 433/4 ரன்களை எடுத்து இந்தியாவை விட 75 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. களத்தில் ரூட் 121*, கேப்டன் ஸ்டோக்ஸ் 36* ரன்களுடன் இந்தியாவை கலங்கடித்து வருகிறார்கள்.