இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பிரைன் லாராவை பின்னுக்கு தள்ளிய ஜோ ரூட் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 357 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் 111 ரன்களையும், கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வீரரான ஜோ ரூட் 60 ரன்களை எட்டிய போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் லாராவின் சாதனையை முறியடித்து புதிய சாதனை நிகழ்த்தினார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதையும் படிங்க : 4 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு – காரணம் இதுதான்
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரராக எட்டாவது இடத்தில் இருந்த லாராவை அவர் பின்னுக்கு தள்ளிவிட்டார். பிரைன் லாரா சர்வதேச போட்டிகளில் 22,358 ரன்களுடன் எட்டாவது இடத்தில் இருந்த வேளையில் தற்போது ஜோ ரூட் 22,413 ரன்களுடன் அவரை பின்னுக்கு தள்ளி எட்டாவது இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



