
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாய கடைசி போட்டி ஜூலை 26ஆம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது.
அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்யாத அந்த அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 61, ஜேசன் ஹோல்டர் 59, ஜோஸ்வா டா சில்வா 49 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 4, கிறிஸ் ஓக்ஸ் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
தொடரும் ரூட் சாதனைகள்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் மீண்டும் சிறப்பாக விளையாடி 376 ரன்கள் குவித்து அசத்தியது. சொல்லப்போனால் டாப் ஆர்டர் சொதப்பியதால் 54/5 என ஆரம்பத்திலேயே இங்கிலாந்து தடுமாறியது. அப்போது அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜோ ரூட் 87, ஜெமி ஸ்மித் 95, கிறிஸ் ஓக்ஸ் ரன்கள் அடித்து சரிந்த இங்கிலாந்தை தூக்கி நிறுத்தினார்கள்.
மறுபுறம் சுமாராகவே பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4, ஜெய்டேன் சீல்ஸ் 3, சமர் ஜோசப் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் 2வது நாள் முடிவில் 33/2 எனத் தடுமாறி வருகிறது. அந்த அணிக்கு கேப்டன் ப்ரத்வெய்ட் 0, மெக்கன்சி 8 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் லூயிஸ் 18*, அலிக் அதனேஷ் 5* ரன்களுடன் போராடி வருகின்றனர்.
முன்னதாக இந்த போட்டியில் அடித்த 87 ரன்களையும் சேர்த்து ஜோ ரூட் தனது டெஸ்ட் கேரியரில் 143 போட்டிகளில் 12027* ரன்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாராவை முந்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 7வது வீரராக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் பிரைன் லாரா 131 போட்டிகளில் 11953 ரன்கள் எடுத்து 7வது இடத்தில் இருந்தார்.
இதையும் படிங்க: அதிர்ஷ்டமா அது எங்களுக்கு தெரிஞ்சுடுச்சு.. இலங்கை 140/1 ரன்ஸ் அடிச்சும் ஜெயிக்க உ.கோ காரணம்.. சூரியகுமார் பேட்டி
தற்போது அவருடைய வாழ்நாள் சாதனையை முறியடித்துள்ள ஜோ ரூட் 33 வருடம் 210 நாட்கள் வயதில் 12000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் இளம் வயதில் 12000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைத்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதனால் சச்சினின் 15921 ரன்கள் உலக சாதனையையும் அவர் உடைத்து விடுவாரோ என்ற அச்சம் இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பட்டியல்:
1. அலெஸ்டர் குக் : 33 வருடம் 13 நாட்கள்
2. ஜோ ரூட் : 33 வருடம் 210 நாட்கள்*
3. சச்சின் டெண்டுல்கர் : 35 வருடம் 176 நாட்கள்