பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முல்தானில் அக்டோபர் 7ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 556 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 151, அப்துல்லா சபிக் 102, ஆகா சல்மான் 10* ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜாக் லீச் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு கேப்டன் ஓலி போப் டக் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லி கொஞ்சம் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் வழக்கம் போல நிதானமாக விளையாடி பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்து அரை சதம் அடித்தார்.
இங்கிலாந்து ஆல் டைம் ஹீரோ:
அவருடன் சேர்ந்து விளையாடிய பென் டக்கெட் மிகவும் அதிரடியாக விளையாடி 11 பவுண்டரியுடன் 84 (75) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்தி வரும் ஜோ ரூட் இந்த பதிவிடும் போது 86* ரன்கள் குவித்துள்ளார். அதனால் இங்கிலாந்து அணி 286-3 ரன்கள் குவித்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அதே போல ஜோ ரூட் சதம் அடிக்கும் முனைப்புடன் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி வருகிறார்.
இந்த 86 ரன்களையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட் 12475 ரன்களை கடந்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் என்ற ஜாம்பவான் அலெஸ்டர் குக் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
5000 ரன்ஸ்:
இதற்கு முன் குக் 291 இன்னிங்ஸில் 12472 ரன்கள் குவித்த நிலையில் ஜோ ரூட் 268 இன்னிங்ஸிலேயே 12475 ரன்கள் குவித்து இங்கிலாந்தின் ஆல் டைம் ஜாம்பவானாக சாதனை படைத்துள்ளார். இது போக 2019 முதல் நடைபெற்ற வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ஜோ ரூட் 5000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்துள்ளார்.
இதையும் படிங்க: புஜாரா இல்லைன்னு இந்தியா கவலைப்பட தேவையில்ல.. ஆஸியை சமாளிக்க அவரே போதும்.. ஷேன் வாட்சன்
அவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்ஷேன் 3904 ரன்களுடன் உள்ளார். அந்த வகையில் எனக்கு தேக்கமே கிடையாது என்ற வகையில் விளையாடும் ஜோ ரூட் அடுத்தடுத்து சாதனைகளை படைத்து வருகிறார். இதனால் 15921 ரன்களை குவித்துள்ள சச்சினையும் முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஜோ ரூட் உலக சாதனை படைக்க பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.



