ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2018 – 19 டெஸ்ட் தொடரில் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த புஜாரா தொடர்நாயகன் விருது வென்றார். அதனால் விராட் கோலி தலைமையில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை வெல்ல புஜாரா முக்கிய பங்காற்றினார்.
அதே போல 2020 – 21 தொடரில் பெரிய ரன்கள் குவிக்காவிட்டாலும் புஜாரா அதிக பந்துகளை எதிர்கொண்டு ஆஸ்திரேலிய பவுலர்களை களைப்படைய வைத்தார். அது மற்ற பேட்ஸ்மேன்கள் செட்டிலாகி நன்றாக பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது. அப்படி ஆஸ்திரேலியாவில் பெற்ற 2 வெற்றிகளிலும் புஜாரா இந்தியாவின் கருப்பு குதிரையாக செயல்பட்டார் என்றால் மிகையாகாது.
பின்னடைவு இல்லை:
ஆனால் அதன் பின் சுமாராக விளையாடிய அவர் தற்போது இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். அதனால் இம்முறை புஜாரா இல்லாதது மண்ணில் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெய்ஸ்வால் போன்ற இந்திய வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை கொண்டிருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
எனவே புஜாரா இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “புஜாரா இல்லாமல் விளையாடி நீங்கள் தவறு செய்ய முடியாது என்று பேசுகிறீர்கள். இருப்பினும் இந்திய அணியில் வேகமாக ரன்கள் குவிக்கக்கூடிய ஜெய்ஸ்வால் போன்ற டாப் ஆர்டர் பேட்மேன்கள் இருக்கின்றனர். ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் பெரிதாக எந்தத் தவறும் செய்யவில்லை”
அதிரடியான ஜெய்ஸ்வால்:
“அவர் எதிரணியினர் தம்மை எளிதில் அவுட்டாக்குவதற்கான வாய்ப்பைக் கொடுப்பதில்லை. அவரைப் போன்ற பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலியாவுக்கு வந்து அதிரடியாக விளையாடி மோசமான பந்துகளை அடித்து நொறுக்கலாம். அந்த வகையில் அவர்கள் அழுத்தத்தை ஆஸ்திரேலிய பவுலர்கள் மீது போடலாம்” என்று கூறினார். மேலும் ஆஸ்திரேலியாவில் மீண்டும் வெல்லும் அளவுக்கு இந்திய அணியில் தரமான பேட்டிங், பவுலிங் இருப்பதாகவும் வாட்சன் கூறினார்.
இதையும் படிங்க: வாயில சவால் விடும் வங்கதேசத்திடம்.. திறமையை சோதிக்க 2வது டி20யில் சூரியகுமார் இதை செய்யனும்.. ஆகாஷ் சோப்ரா
குறிப்பாக ரிஷப் பண்ட், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுக்கலாம் என்றும் வாட்சன் தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியா தங்களுடைய சொந்த மண்ணில் வெல்வதற்கு இந்தியாவுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் வாட்சன் கூறியுள்ளார். மொத்தத்தில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்று எதிர்பார்ப்பு இங்குள்ள ரசிகர்களிடம் உள்ளது.



