பஸ்பாலுக்கு டாட்டா காட்டிய ரூட்.. தனது வழியில் முதல் இங்கிலாந்து வீரராக பிரம்மாண்ட சாதனை

Joe Root 5
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. 2 – 1* என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கும் இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இந்த போட்டியில் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் நாள் முடிவில் 302/7 ரன்கள் குவித்து சவாலை கொடுத்து வருகிறது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 106* ரன்களுடன் களத்தில் இருக்கும் நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஆகாஷ் தீப் 3* விக்கெட்டுகள் எடுத்து அசத்தி வருகிறார். முன்னதாக இந்த தொடரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து ஆரம்பத்திலேயே எச்சரித்தது.

- Advertisement -

பஸ்பாலுக்கு டாட்டா:
அதை முதல் போட்டியில் செய்தும் காட்டிய அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் அதற்கடுத்த 2 போட்டிகளில் பெரிய இலக்கை சேசிங் செய்யும் போது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாத இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து முறையே 106, 434 ரன்கள் வித்தியாசத்தில் அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே 11000 ரன்கள் குவித்த அனுபவமிக்க ஜோ ரூட் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமானது. குறிப்பாக முதல் 3 போட்டிகளில் 157 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர் ஒரு முறை கூட அரை சதமடிக்காமல் வெறும் 75 ரன்கள் மட்டுமே அடித்தார்.

- Advertisement -

அதனால் நல்ல பேட்ஸ்மேனான அவரை பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் கெடுத்து விட்டதாக இந்திய ரசிகர்களே விமர்சித்தனர். மேலும் அப்போது உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை பின்பற்றி விளையாடுமாறு ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற முன்னாள் வீரர்கள் அவரது கேட்டுக் கொண்டனர். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை கையில் எடுத்துள்ள ஜோ ரூட் இதுவரை 226 பந்துகளை எதிர்கொண்டு 106* ரன்கள் குவித்து தன்னுடைய தரத்தை நிரூபித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்நாள் ஆட்டத்தில் கேப்டனாக செயல்பட்ட தமிழாகவீரர் அஷ்வின்.. எப்படி சாத்தியமானது? – விவரம் இதோ

அத்துடன் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 சதங்கள் அடித்த முதல் வீரராகவும் அவர் உலக சாதனை படைத்துள்ளார். அதை விட டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் முறையே 11599, 6522, 893 ரன்கள் எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 19000 ரன்கள் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற மாபெரும் சாதனையும் படைத்துள்ளார். அந்த வகையில் பஸ்பால் ஆட்டத்திற்கு டாட்டா காட்டி மூட்டைக்கட்டிய முதல் போட்டியிலேயே அவர் இந்தளவுக்கு அபாரமாக செயல்பட்டு ஃபார்முக்கு திரும்பியுள்ளார் என்றால் மிகையாகாது.

Advertisement