
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை ஃபினிஷராக வெளிப்படுத்தியதன் காரணமாக கடந்த ஆண்டு அவருக்கு மீண்டும் டி20 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே 2023 ஆம் ஆண்டு அவர் இந்திய அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் தொடர் வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார்.
அவ்வேளையில் 2025 ஐபிஎல் தொடரை ஆர்சிபி அணி கைப்பற்றவே அவரது அந்த சிறப்பான செயல்பாட்டை கணக்கில் கொண்டு மீண்டும் டி20 அணியில் அவருக்கு தொடர்ச்சியாக இடம் வழங்கப்பட்டு பினிஷர் ரோலில் சில போட்டிகளிலும் அவர் பங்கேற்று விளையாடியிருந்தார். இதன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் அவருக்கு இடம் கிடைக்கும் என்று பலராலும் பேசப்பட்டது.
ஆனால் கடந்த மாதம் வெளியான டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பின் போது சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராகவும், துவக்க வீரராகவும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டதோடு மட்டுமின்றி பேக்கப் விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக ஜிதேஷ் சர்மா டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நிராகரிக்கப்பட்டார்.
இந்நிலையில் இப்படி தன்னை டி20 உலக கோப்பை தொடரிலிருந்து நீக்கியது மிகவும் வருத்தம் அளித்துள்ளதாக தற்போது ஜிதேஷ் சர்மா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் வரை நான் நீக்கப்படுவேன் என்பது குறித்து தெரியவில்லை.
ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு நான் பயிற்சியாளர்களுடன், தேர்வாளர்களுடனும் உரையாடி இருந்தேன். அப்போது அவர்கள் என்னுடைய நீக்கத்திற்கான நியாயமான காரணம் என்ன? என்பதை கூறினார்கள். அப்படி அவர்கள் கூறிய காரணம் எனக்கு புரிந்ததால் நான் அந்த முடிவை ஏற்றுக் கொண்டேன். இருந்தாலும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்காக நான் கடுமையாக உழைத்திருந்தேன்.
இதையும் படிங்க : ஒருநாள் தொடர் மட்டுமின்றி டி20 தொடரில் இருந்தும் விலகிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் – என்ன காரணம்?
இப்படி ஒரு உழைப்பிற்கு பிறகு என்னை அணியிலிருந்து நீக்கியது மிகவும் மன வேதனையாக இருந்தது. இருந்தாலும் இது விதி என்பதை நான் மறுக்க முடியாது. அந்த நேரத்தில் கடினமாக இருந்தாலும் என்னுடைய குடும்பத்தினரும், தினேஷ் கார்த்திக் அவர்களுடனும் பேசியதிலிருந்து சற்று நிம்மதி கிடைத்ததாகவும் ஜிதேஷ் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.