
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக நேற்று செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியாவிலிருந்து துபாய் புறப்பட்டு சென்றது. அங்கு சில நாட்கள் தங்கி ஐசிசி கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் பயிற்சி பெறும் இந்திய அணி தங்களது முதலாவது போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அணியை எதிர்த்து துபாய் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
எதிர்வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி துவங்கும் 17-ஆவது ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் ஏற்கனவே சஞ்சு சாம்சன் இந்திய அணியின் துவக்க வீரராகவும், விக்கெட் கீப்பராகவும் விளையாடி வந்த வேளையில் மீண்டும் சுப்மன் கில் அணிக்குள் வந்துள்ளதால் அவர் துவக்க வீரருக்கான இடத்தினை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனது துவக்க வீரருக்கான இடத்தினை இழக்கும் அபாயத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி பிளேயிங் லெவனில் இருந்து வெளியேறும் அபாயமும் சாம்சனுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராகவும், பினிஷராகவும் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற பயிற்சிக்கு பிறகு இந்திய அணியில் என்ன மாற்றங்கள் நிகழப்போகிறது? என்பது குறித்த ஒரு தெளிவான விளக்கம் கிடைத்துள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற்ற பயிற்சியில் சஞ்சு சாம்சன் கீப்பிங் கிளவுஸ் எதுவும் அணியாமல் உயரமான கேட்ச்களை பிடிப்பதிலும், பவுண்டரி லைனில் இருந்து த்ரோ செய்வதிலும் அதிக கவனத்தை செலுத்தி பயிற்சி மேற்கொண்டார்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் வேணாம்.. அவங்க 2 பேரே ஓப்பனர்களாக விளையாடட்டும் – மதன் லால் ஆதரவு
அதேவேளையில் ஜிதேஷ் சர்மா கீப்பிங் கிளவுஸ் அணிந்து விக்கெட் கீப்பராக பயிற்சி பெற்றார். இந்த பயிற்சி வகுப்பினை கவனிக்கும் போது ஜிதேஷ் சர்மா தான் விக்கெட் கீப்பராக இடம்பெறுப்பார் என்று தெரிகிறது. அதேவேளையில் சஞ்சு சாம்சன் கேட்சிங் பயிற்சியில் ஈடுபட்டதால் அவர் முழுநேர பேட்ஸ்மேனாக திலக் வர்மாவிற்கு பதிலாக மூன்றாவது இடத்தில் இறங்கலாம் என்றும் தெரிகிறது.