நாட்டை விட பணமே முக்கியம், கடைசி நேரத்தில் டி20 உ.கோ அணியில் வெளியேறிய ஸ்டார் நியூஸிலாந்து வீரர் – நடந்தது என்ன

NZ
- Advertisement -

ஒரு காலத்தில் நாட்டுக்காக மட்டுமே சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நிலைமை தாண்டி இப்போதெல்லாம் உலகின் அனைத்து நாடுகளிலும் டி20 லீக் தொடரில் நடைபெறுவதால் அதை நோக்கி நிறைய வீரர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். அதுபோக சர்வதேச அணிக்கும் லீக் தொடர்களிலும் ஒன்று சேர விளையாடுவதால் ஏற்படும் பணிச்சுமையை நிர்வகிக்க இப்போதெல்லாம் ஏதேனும் ஒருவகையான கிரிக்கெட்டிலிருந்து முக்கிய வீரர்கள் விடை பெறுவதும் வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் டி20 லீக் தொடர்களில் கவனம் செலுத்துவதற்காகவும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவும் பணிச்சுமையை நிர்வகிக்கவும் நியூசிலாந்து மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக கடந்த மாதம் அதிரடியாக அறிவித்தார்.

அதாவது இதுவரை நியூசிலாந்துக்காக அனைத்து போட்டிகளிலும் விளையாடிய அவர் இனிமேல் தாம் விரும்பும் போட்டிகளில் மட்டும் விளையாடும் முடிவை எடுத்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அந்த வரிசையில் நியூசிலாந்தைச் சேர்ந்த மற்றொரு நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீசம் இணைந்துள்ளார். கடந்த 2012 முதல் நியூசிலாந்துக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி வரும் இவர் 2019 உலகக்கோப்பை பைனல் மற்றும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றினார். இருப்பினும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறிய அவருக்கு தொடர்ச்சியாக நியூசிலாந்தின் 11 பேர் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

- Advertisement -

பணமே முக்கியம்:
இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய சம்பளப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்த அவர் தற்போது தென் ஆப்பிரிக்கா, அமீரகம் போன்ற நாடுகளில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள டி20 தொடரில் விளையாட தனது பெயரை கொடுத்துள்ளதால் அந்த முடிவிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணி இன்னும் ஒருசில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் டிரென்ட் போல்ட் மற்றும் கோலின் டீ கிராண்ட்ஹோம் ஆகியோரது இடத்தில் நீங்கள் விளையாடுவீர்கள் என்று அவரிடம் நியூசிலாந்து வாரியம் உறுதியளித்திருந்ததாக தெரிகிறது.

ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஜிம்மி நீஷம் டி20 தொடர்களில் கவனம் செலுத்துவதற்காக கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது நியூசிலாந்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நியூசிலாந்து மத்திய ஒப்பந்ததிலிருந்து இன்று நான் விலகும் முடிவு நாட்டை விட பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பார்க்கப்படும் என்பது எனக்கு தெரியும். இருப்பினும் கடந்த ஜூலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் முடிவெடுத்தேன். ஆனால் அதன்பின் உலகில் நடைபெறும் பல்வேறு டி20 தொடர்களில் விளையாட உறுதி அளித்துள்ளதால் இந்த முடிவை எடுக்க வேண்டியுள்ளது”

- Advertisement -

“இது கடினமான முடிவு என்றாலும் நியூசிலாந்து கிரிக்கெட்டுக்காக கையெழுத்திடுவதை விட டி20 தொடர்களில் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டியதை கௌரவமானதாக கருதுகிறேன். நியூசிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியது என்னுடைய கேரியரில் மிகவும் பெருமை வாய்ந்த தருணமாகும். இப்போதும் கூட எனது நாட்டுக்காக வரும் காலங்களில் குறிப்பாக உலக கோப்பை போன்ற தொடர்களில் விளையாட தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

நாட்டை விட பணமே முக்கியம் என்ற முடிவை எடுத்து அது பற்றி வெளிப்படையாக பேசியுள்ள ஜிம்மி நீசம் ட்ரெண்ட் போல்ட் போலவே வருங்காலங்களில் உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் வேண்டுமானால் நியூசிலாந்துக்கு விளையாட தயார் என்று அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து வரும் ஜனவரியில் தென்னாபிரிக்காவில் நடைபெறும் புதிய டி20 லீக் தொடரில் விளையாடுவதற்கு அவர் தயாராகியுள்ளார்.

- Advertisement -

இதனால் வரும் செப்டம்பர் 20ஆம் தேதியன்று அறிவிக்கப்பட உள்ள டி20 உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியில் இவரது பெயர் இடம் பெறாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருடைய இந்த அறிவிப்பை நியூசிலாந்து வாரியமும் ஏற்றுக்கொண்டு அவருக்கு பதில் ஃபின் ஆலன் மற்றும் பிளேர் டிக்னர் ஆகிய 2 வீரர்களுக்கு முதல் முறையாக மத்திய சம்பள ஒப்பந்தத்தில் வாய்ப்பளித்துள்ளது.

இதையும் படிங்க : பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த 6 கிரிக்கெட் வீரர்களின் சுயசரிதை புத்தகங்கள்

இருப்பினும் 31 வயதிலேயே இந்த முக்கிய வீரர் தேசத்தை விட டி20 லீக் முக்கியம் என்று முடிவெடுத்து வெளிப்படையாக பேசியுள்ளது நியூசிலாந்து மட்டுமல்லாது உலக அளவிலான ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

Advertisement