பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த 6 கிரிக்கெட் வீரர்களின் சுயசரிதை புத்தகங்கள்

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் நட்சத்திர வீரர்கள் பேட்டிங், பவுலிங் என களத்தில் எதிர்கொள்ள வேண்டிய சவால்களை தாண்டி அணி நிர்வாகம், சக வீரர்களிடம் ஏற்படும் மன வேறுபாடுகள் போன்ற வெளியில் சொல்ல முடியாத நிறைய சவால்களையும் கடந்தால்தான் சாதனைகளை படைக்க முடியும். விளையாடும் போது அதை சொல்ல முடியாத அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் தாங்கள் சந்தித்த சவால்களை அடுத்த தலைமுறை இளம் வீரர்கள் எப்படி சமாளிப்பது என்பதற்காக நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் சுயசரிதை புத்தகத்தை எழுதுவது வழக்கமானதாகும்.

அதுபோன்ற சுயசரிதைகள் வெளியாகும்போது யாருமே நினைத்துக்கூட பார்க்காத சில நிகழ்வுகளை கிரிக்கெட் வீரர்கள் வெளியிடுவார்கள். அந்த வகையில் சமீப காலங்களில் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த சர்ச்சைகளையும் சவால்களையும் பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. கருப்பு – மாநிறம்: சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்த நியூசிலாந்து பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள ஜாம்பவான் ராஸ் டைலர் கடந்த பிப்ரவரியில் ஓய்வு பெற்று சமீபத்தில் தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார்.

“ராஸ் டெய்லர் : ப்ளாக் & வைட்” என்ற பெயரில் வெளியிட்ட அந்த புத்தகத்தில் மாநிறத்தில் இருக்கும் தம்மை சில நியூசிலாந்து அணி வீரர்களும் அணி நிர்வாகிகளும் நிறவெறி அடிப்படையில் கிண்டலடித்ததாக அவர் தெரிவித்திருந்தது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. அதுபோக ஐபிஎல் தொடரில் டக் அவுட்டானதால் ராஜஸ்தான் அணி உரிமையாளர் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறியது ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.

- Advertisement -

5. ஏமாற்றிய பாகிஸ்தான்: 1992இல் இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் களமிறங்கிய 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் ஆகியோர் சேர்ந்து 43 விக்கெட்டுகளை எடுத்து 2 – 1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வெற்றிபெற வைத்தனர்.

ஆனால் அத்தொடரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் மற்றும் ஆகிப் ஜாவேத் ஆகிய மூவரும் இணைந்து தங்களது நகங்களை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தி ஏமாற்றி வென்றதாக இங்கிலாந்து ஜாம்பவான் இயன் போத்தம் தனது ஓய்வுக்கு பின் வெளியிட்ட “தி போத்தம் ரிப்போர்ட்” சுயசரிதைப் புத்தகத்தில் குறிப்பிட்டது ரசிகர்களை அதிர வைத்தது.

- Advertisement -

4. ஸ்மித்தின் அதிகாரம்: 2000ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் சிக்கி தடைபெற்று மீண்டும் விளையாடிய தென் ஆப்பிரிக்காவின் ஹர்ஷல் கிப்ஸ் ரசிகர்களின் பழைய நம்பிக்கையை பெறாமலேயே சில வருடங்களுக்கு பின் ஓய்வு பெற்றார். அதன்பின் அவர் வெளியிட்ட “டு தி பாயிண்ட்” எனும் தன்னுடைய சுயசரிதையில் அந்த சமயத்தில் இருந்த தென்னாப்பிரிக்க அணியில் கேப்டன் கிரேம் ஸ்மித் பயிற்சியாளர் மிக்கி ஆர்தரை கைக்குள் போட்டு ஆட்சி அதிகாரம் செய்ததாக குற்றம் சாட்டியிருந்தார்.

அவர்களுக்கு மார்க் பவுச்சர், ஜாக் காலிஸ் மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் உதவியாக இருந்ததால் முன்னாள் கேப்டன் ஹன்சி கிராஞ்சி சூதாட்ட புகார்களை ஒப்புக்கொண்ட பின் தென் ஆப்பிரிக்க அணிக்குள் பழைய ஸ்பிரிட்டை உருவாக்க முடியாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

3. அக்ஃதரின் அதிரடி: அதிரடியான வேகத்தில் பந்து வீசி உலக சாதனை படைத்துள்ள பாகிஸ்தானின் சோயப் அக்தர் “சர்ச்சைக்குரிய வகையில் உங்களுடையது” என்ற பெயரில் தன்னுடைய சுயசரிதையை வெளியிட்டிருந்தார். அதில் இந்திய வீரர்களை வம்பிழுக்கும் வகையில் நிறைய கருத்துக்களை கூறியிருந்த அவர் பைசலாபாத் நகரில் நடைபெற்ற ஒரு போட்டியில் தன்னுடைய முதல் பந்தை பார்த்தே சச்சின் டெண்டுல்கர் பயந்து ஒதுங்கியதாக குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் பவுன்சர் வாயிலாக தலையில் அடித்த பின் பயந்துபோய் தனது பந்துகளில் சச்சின் மேற்கொண்டு ரன்கள் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதுபோக ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு பினிஷிங் செய்யும் கலை தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

2. செல்பிஷ் வீரர்: கிரிக்கெட்டில் சில சமயங்களில் அணியின் வெற்றியை விட சாதனைகளுக்காக சில வீரர்கள் செயல்படுவார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் மகத்தான கேப்டனாக கருதப்படும் ஸ்டீவ் வாக் தாம் விளையாடியதிலேயே மிகவும் சுயநலமான வீரர் என்று ஷேன் வார்னே தன்னுடைய சுயசரிதையான “நோ ஸ்பின்” புத்தகத்தில் குறிப்பிட்டது ஆஸ்திரேலிய ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

குறிப்பாக 1999இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியின் போது ஒரு கேப்டனாக தமக்கு ஆதரவு கொடுக்காமல் அதிரடியாக நீக்கியதாக அவர் தெரிவித்திருந்தார். அதைவிட எப்போதும் ஸ்டீவ் வாக் தனது பேட்டிங் சராசரியை 50க்கும் குறையாமல் பார்த்துக்கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்ததாகவும் வார்னே குறிப்பிட்டிருந்தார்.

1. ரிங் மாஸ்டர்: இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஓய்வுக்குப்பின் “பிளேயிங் இட் மை வே” என்ற பெயரில் வெளியிட்ட சுயசரிதை புத்தகத்தில் இந்திய கிரிக்கெட்டை பிளவு படுத்திய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் பற்றி குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக 2007 உலக கோப்பைக்கு சில மாதங்கள் முன்பாக தன்னுடைய வீட்டுக்கு வந்த கிரேக் செப்பல் உங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி இந்திய கேப்டன் பதவியை ராகுல் டிராவிட்டிடம் இருந்து பறிக்குமாறு கூறியதாகவும் அப்படி செய்தால் நாம் இருவரும் சேர்ந்து இந்திய கிரிக்கெட்டை ஆளலாம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இந்திய கேப்டன் மீது பயிற்சியாளராக மரியாதை வைக்காமல் அவர் இவ்வாறு பேசியது தமக்கும் தம்முடன் அமர்ந்திருந்த மனைவி அஞ்சலிக்கும் அதிர்ச்சியாக இருந்ததாகவும் சச்சின் தெரிவித்திருந்தார். அத்துடன் ரிங் மாஸ்டர் போல தன்னுடைய ஐடியாக்களை இந்திய வீரர்கள் மீது வலுக்கட்டாயமாக அவர் திணித்ததாகவும் சச்சின் குற்றம் சாட்டியிருந்தார்.

Advertisement