IND vs AUS : ஒருநாள் தொடரிலிருந்து காயத்தால் விலகும் ஆஸி வீரர் – ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு நேர்ந்த சோகம்

australianteam
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முதலில் நடைபெறும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. போதாகுறைக்கு கேப்டன் பட் கமின்ஸ், டேவிட் வார்னர், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற சில முக்கிய வீரர்கள் விலகியதால் 4 – 0 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஒயிட் வாஷ் தோல்வியை சந்திப்பது உறுதி என்ற கருத்துக்கள் எழுந்தன.

ஆனால் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் இந்தூரில் நடைபெற்ற 3வது போட்டியில் கொதித்தெழுந்த ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ள அந்த அணி டெஸ்ட் தொடரில் ஏற்கனவே தவறிப்போன வெற்றியை அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரில் கைப்பற்ற முயற்சிக்க உள்ளது.

- Advertisement -

மும்பைக்கும் பின்னடைவு:
ஆனால் அதற்காக அறிவிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேய் ரிச்சர்ட்சன் காயத்தால் வெளியேறுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 2019 முதலே காயங்களால் அவதிப்பட்டு வரும் அவர் 2021 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்ட் நகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினாலும் அடுத்த போட்டியிலேயே காயத்தால் வெளியேறினார்.

அதிலிருந்து குணமடைந்து விளையாட துவங்கிய அவர் 2022/23 பிக் பேஷ் தொடரின் போது மீண்டும் காயத்தை சந்தித்ததால் தற்போது நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் தேர்வு செய்யப்படவில்லை. அந்த நிலையில் இன்னும் முழுமையாக குணமடையாததால் மார்ச் 10ஆம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவின் பிரபல உள்ளூர் தொடரான மார்ஷ் கோப்பை ஃபைனலில் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார். அதே காரணத்தால் மார்ச் 17ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக துவங்கும் ஒருநாள் தொடரிலும் வெளியேறியுள்ள அவர் அடுத்ததாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதற்கான வாய்ப்பில்லை.

- Advertisement -

அவருக்கான மாற்று வீரர் பற்றிய அறிவிப்பை ஆஸ்திரேலிய வாரியம் இது வரை வெளியிடவில்லை. முன்னதாக காயத்திலிருந்து குணமடைந்ததால் 2023 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்ற அவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் 1.5 கோடி என்ற குறைவான தொகைக்கு வாங்கியிருந்தது. ஆனால் தற்போது காயத்தால் இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் வெள்ளைப்பந்து தொடர்களிலிருந்து வெளியேறியுள்ள அவர் 2023 ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இந்திய சுற்றுப்பயணம் முடிந்த அடுத்த வாரத்திலேயே மார்ச் 31ஆம் தேதி 2023 ஐபிஎல் துவங்கும் நிலையில் அதற்குள் அவர் நிச்சயமாக குணமடைவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிய வருகிறது. அதனால் காயத்தால் ஜேய் ரிச்சர்ட்சன் வெளியேறுவது ஆஸ்திரேலிய அணியை விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காரணம் ஏற்கனவே முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோப்ரா ஆர்ச்சரும் பங்கேற்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் இவரை வைத்து நிலைமையை சமாளிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் திட்டங்கள் தற்போது உடைய துவங்கியுள்ளது.

இதையும் படிங்க:IND vs AUS : ரோஹித் 150 ரன்களுடன் வெற்றியும் விட்டாரு, 4வது போட்டில எங்களோட பலத்தை காட்ட போறோம் – ஆஸி வீரர் எச்சரிக்கை

கடந்த வருடம் தொடர் தோல்விகளால் வரலாற்றில் முதல் முறையாக புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லாமல் பெரிய அவமானத்தை சந்தித்த மும்பை இந்த வருடம் சிறந்த கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஆனால் சீசன் துவங்குவதற்கு முன்பாகவே வேகபந்து வீச்சு துறையில் இப்படி அடுத்தடுத்த முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறி வருவது மும்பை அணிக்கு பின்னடைவையும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement