இதை மட்டும் செய்ங்க விராட் கோலிய ஈசியா முடிச்சுடலாம், ஆஸி அணிக்கு ஜாம்பவான் ஜெப் தாம்சன் கொடுத்த ஆலோசனை என்ன

Jeff Thomson Virat Kohli
- Advertisement -

நியூசிலாந்து தொடரை முடித்துள்ள இந்தியா அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. அத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றால் தான் வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையில் இந்தியா களமிறங்குகிறது. மறுபுறம் ஏற்கனவே பைனல் வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்து விட்ட ஆஸ்திரேலியா 2004க்குப்பின் இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

அதை விட 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்த இந்தியாவை இம்முறை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து பழிவாங்க முழு மூச்சுடன் ஆஸ்திரேலியா செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அஷ்வின் போன்ற சவாலை கொடுக்கும் இந்திய பவுலர்களை எதிர்கொள்ள தேவையான திட்டங்களை வகுத்துள்ள அந்த அணியினர் இந்தியா புறப்படுவதற்கு முன்பாக சிட்னியில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச் ஒன்றை உருவாக்கி அதில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

- Advertisement -

இதை தொடர்ந்து நாக்பூரில் வரும் பிப்ரவரி 9ஆம் தேதியன்று துவங்கும் இத்தொடரில் தொல்லை கொடுக்கக் கூடிய ரிசப் பண்ட் காயத்தால் விளையாடாத நிலைமையில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்பதால் அவரை சாய்க்க தேவையான திட்டங்களையும் ஆஸ்திரேலியா தயார் செய்து வருகிறது. மேலும் 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தவித்த அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஃபார்முக்கு திரும்பினாலும் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

ஜாம்பவானின் ஆலோசனை:
எனவே அதை பயன்படுத்தி அவரை பெரிய ரன்கள் அடிக்க விடாமல் ஆரம்பத்திலேயே சாய்த்தால் தான் வெற்றி காண முடியும் என்பதில் ஆஸ்திரேலிய அணியினர் உறுதியாக இருப்பார்கள். இந்நிலையில் விராட் கோலியை அவுட் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் பந்து வீசாமல் அவரை சுதந்திரமாக ரன்கள் எடுக்க விடாமல் அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் பந்து வீசினாலே தாமாக அவுட்டாகி விடுவார் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஜெப் தாம்சன் கூறியுள்ளார்.

- Advertisement -

80, 90களில் உலகையே மிரட்டிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஜொலித்த அவர் ஆஸ்திரேலிய அணிக்கு இது பற்றி கொடுத்த ஆலோசனை பின்வருமாறு. “இதர வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது போலவே நீங்கள் விராட் கோலிக்கு எதிராகவும் பந்து வீச வேண்டும். குறிப்பாக அவரை சௌகரியகமாக விளையாடாமல் கைகளை கட்டி போட வேண்டும். அதே சமயம் அவரை அதிகமாக ரன்கள் எடுக்கவும் விடாதீர்கள். ஏனெனில் அவரிடம் அதிகப்படியான ஷாட்கள் இருப்பதால் அவரை அமைதியாக விளையாட வைப்பது கடினமாகும். எனவே அவர் அதிக ரிஸ்க் எடுக்கும் வகையில் விளையாட வையுங்கள்”

“அவரை சௌகரியமாக விளையாடும் சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வந்தால் பின்னர் தாராளமாக அவுட்டாக்கி விடலாம். அவ்வாறு தான் விராட் கோலி மட்டுமல்லாமல் விவ் ரிச்சர்ட்ஸ், கிரேக் சேப்பல், சுனில் கவாஸ்கர் போன்ற மகத்தான வீரர்களையும் நீங்கள் அவுட் செய்ய முடியும். விராட் கோலிக்கு எதிராக மனதளவில் நீங்கள் போராட வேண்டும். அதில் முதலில் பின்னடைவை சந்திப்பவர்கள் தோற்பார்கள். எனவே வெற்றி காண்பதற்கு நீங்கள் அவரை விட மனதளவில் திடமானவராக இருக்க வேண்டும். எப்போதுமே நல்ல பேட்ஸ்மேன்கள் அல்லது பவுலர்கள் அதில் வேலை செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: வீடியோ : உடைந்த கையுடன் ரிவர்ஸ் பவுண்டரி அடித்த விஹாரி – காயத்துடன் விளையாடிய காரணம் பற்றி பேசியது இதோ

“நல்ல வீரர்கள் யாராக இருந்தாலும் எது நடந்தாலும் பிளான் பி, சி போன்றவற்றை வைத்திருப்பார்கள். சில நேரங்களில் உங்களுக்கு எதுவும் வேலை செய்யவில்லை என்றாலும் அவர் எளிதாக அடிக்கும் அளவுக்கு பந்து வீசாதீர்கள்” என்று கூறினார். இப்படி அதிரடி திட்டங்களுடன் வரும் ஆஸ்திரேலியாவை சிறப்பாக எதிர்கொண்டு 2019க்குப்பின் விராட் கோலி சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2012க்குப்பின் கடந்த 10 வருடங்களாக சொந்த மண்ணில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் தோற்காமல் இருந்து வரும் இந்தியா இம்முறையும் வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற போராட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement