சாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த வேளையில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
டேல் ஸ்டெயின் சாதனையை தகர்த்த ஜேடன் சீல்ஸ் :
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களை குவித்தது.
பின்னர் 295 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் அசத்தலான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 92 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக 202 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி மாபெரும் வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரையும் 34 ஆண்டுகளுக்கு பின்னர் கைப்பற்றி அசத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேடன் சீல்ஸ் 7.2 ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சே அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் அவர் எடுத்த 6 விக்கெட்டுகளின் மூலம் முன்னாள் தென்னாப்பிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டெயினின் சாதனையையும் முறியடித்துள்ளார். அந்த வகையில் ஜேடன் சீல்ஸ் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரராக டேல் ஸ்டெயின் முதலிடத்தில் இருந்தார். அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 39 ரன்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதையும் படிங்க : வெறும் 92க்கு ஆல் அவுட்.. பாகிஸ்தானை ஓடவிட்ட வெஸ்ட் இண்டீஸ் .. 34 வருடம் கழித்து 2 சாதனை வெற்றி
இந்நிலையில் அவரது இந்த சாதனையை முறியடித்துள்ள ஜேடன் சீல்ஸ் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வீரராக மாறியுள்ளார். அதுதவிர்த்து வெஸ்ட் இண்டீஸ் சார்பாக ஒருநாள் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய மூன்றாவது வீரர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



