
உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் அதிகளவு வரவேற்பினை பெற்றதால் மெல்ல மெல்ல ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் அழிவை நோக்கி செல்லத் தொடங்கின. ஒருநாள் போட்டிகள் ஓரளவு சுதாரித்துக் கொண்டாலும், டெஸ்ட் போட்டிகளை காண்பதற்கான ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது. அந்த நேரத்தில் தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை உருவாக்கி மீண்டும் டெஸ்ட் தொடரின் மீது ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க வைத்தது.
அந்த வகையில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது நடைபெற்று வருகிறது. அந்த தொடரில் இந்திய அணியும் பங்கேற்று விளையாடி வரும் வேளையில் தற்போது இந்திய அணி ஒருமாத ஓய்வில் இருக்கும் வேளையில் அடுத்ததாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என பத்து டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து பங்கேற்க இருக்கிறது.
இந்நிலையில் பிசிசிஐ-யின் செயலாளரான ஜெய் ஷா இந்தியாவில் இனி பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்தப் போவதில்லை என்று அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் சில விளக்கத்தையும் வழங்கியுள்ளார். அந்த வகையில் ஜெய்ஷா கூறுகையில் : பகலிரவு டெஸ்ட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட்டுகளை ஐந்து நாட்களுக்கும் சேர்த்துதான் ரசிகர்கள் விலைக்கு வாங்குகின்றனர்.
ஆனால் போட்டி இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிந்து விடுகிறது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் எப்போதுமே குறைந்த நாட்களில் முடிவதால் ரசிகர்களுக்கு மீண்டும் அந்த மீதி உள்ள நாட்களுக்கான டிக்கெட் பணத்தை எங்களால் திருப்பிக் கொடுக்க முடியாது. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கலாம். ரசிகர்களின் நலனுக்காகவே பகலிரவு போட்டிகளை நடத்தப் போவதில்லை என்று ஜெய் ஷா கூறியுள்ளார்.
இந்தியாவில் இதுவரை மூன்று முறை பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அதற்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராகவும், பின்னர் இலங்கை அணிக்கு எதிராகவும் விளையாடியிருந்தது. இப்படி விளையாடிய மூன்று பகலிரவு போட்டிகளுமே மூன்று நாட்களை தாண்டவில்லை. இதன் காரணமாகவே ஜெயிஷா இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இதயத்தை ஜெர்ஸியில் வெச்சுருப்பாரு.. இப்போவும் அவர் லீடர் தான்.. தோனி, விராட், ரோஹித் கேப்டன்ஷிப் பற்றி பும்ரா
ஆனாலும் வெளிநாட்டில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் என்பது பிரபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதும் அங்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.