
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று வரலாறு படைத்தது. அத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 8 வெற்றிகளை பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வென்றது.
அந்த வெற்றியால் கடந்த 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தொடர் தோல்வியையும் இந்தியா உடைத்துள்ளது. அந்த வெற்றியுடன் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றனர். இருப்பினும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.
ரோஹித் தலைமையில்:
இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையில் 2025 சாம்பியன் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் ஆகிய 2 ஐசிசி தொடர்களையும் இந்தியா வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “2023 நவம்பர் மாதம் நாம் தொடர்ந்து 10 போட்டிகளை வென்று இதயங்களை வென்றோம்”
“ஆனால் நம்மால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஜுன் 29ஆம் தேதி பார்படாஸ் நகரில் நாம் கோப்பையையும் ரசிகர்களின் இதயங்களையும் வென்று மூவர்ண கொடியை நிலை நாட்டுவோம் என்று ராஜ்கோட் நகரில் சொல்லி இருந்தேன். நம்முடைய கேப்டன் அதே போல நமது நாட்டின் கொடியை அங்கு நிலை நாட்டினார்”
“அந்த வெற்றிக்குப் பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் சாம்பியன் டிராபி ஆகிய அடுத்து வரும் ஐசிசி தொடர்களில் நமது அணி அசத்தும் என்று நான் முழுமையான தன்னம்பிக்கையுடன் உள்ளேன். அந்தத் தொடர்களில் நாம் ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன்களாக சாதனை படைப்போம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அந்த 2 வரலாற்றையும் படைக்கும்.. ஜெய் ஷா நம்பிக்கையுடன் அறிவிப்பு
அதன் பின் 2025 ஜூன் மாதம் இங்கிலாந்தின் லண்டனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் நடைபெற உள்ளது. அந்த 2 தொடர்களிலும் இந்தியாவின் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்பது ஜெய் ஷா அறிவிப்பால் இப்போதே உறுதியாகியுள்ளது என்று சொல்லலாம். சொல்லப்போனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிடம் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது. எனவே அப்போட்டியில் விட்ட வெற்றியை மீண்டும் பிடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.