முகமது ஷமி 2024 டி20 உலகக் கோப்பையிலும் ஆடமாட்டாரு.. கம்பேக் தேதியை அறிவித்த ஜெய் ஷா

Jay Shah 7
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கடந்த 2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். சொல்லப்போனால் அதற்கு முன்பாகவே லேசான காயத்தை சந்தித்திருந்த அவர் உலகக் கோப்பையில் தேர்வாகி முதல் 4 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா காயமடைந்து வெளியேறியதால் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.

அந்த வாய்ப்பில் அனலாக செயல்பட்ட அவர் மொத்தம் 24 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். குறிப்பாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 100 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இலங்கையை 55 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வெற்றி பெறுவதற்கு உதவினார். அதை விட நியூசிலாந்துக்கு எதிரான செமி ஃபைனலில் 6 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒரு உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றையும் படைத்தார்.

- Advertisement -

விலகிய ஷமி:
ஆனால் அதன் பின்பும் காயத்துடனேயே விளையாடினால் பெரிதாகி விடும் என்று கருதிய அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன் காரணமாக நடைபெற்று முடிந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் முகமது ஷமி விளையாடவில்லை. இருப்பினும் தற்போது குணமடைந்து வரும் அவர் ஐபிஎல் 2024 தொடரின் 2வது பகுதியிலாவது குஜராத் அணிக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையிலும் முகமது ஷமி விளையாட மாட்டார் என்று பிசிசிஐ ஜெய் ஷா அறிவித்துள்ளார். மேலும் வரும் செப்டம்பர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் ஷமி கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக ஜெய் ஷா கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “முகமது ஷமி அறுவை சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். அடுத்ததாக வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் தான் அவர் மீண்டும் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது” என்று கூறினார். இதனால் இந்திய அணி ரசிகர்களும் குஜராத் டைட்டன்ஸ் அணி ரசிகர்களும் ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆண்டர்சனை ஹாட்ரிக் சிக்ஸர் அடிச்சாரு.. ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பையும் கொடுங்க.. ஃகைப் கோரிக்கை

குறிப்பாக கடந்த வருடம் அதிக விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை வென்ற ஷமி இம்முறை விளையாட மாட்டார் என்பது குஜராத்துக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் நாட்டுக்காக காயத்துடன் 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய ஷமி விரைவில் குணமடைந்து மீண்டும் விளையாட வர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

Advertisement