
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் இணைந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறார். இந்திய அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும் பும்ரா இந்த இங்கிலாந்து தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
3 வகையான போட்டிகளிலும் ஆண்டு முழுவதும் விளையாடும் அவரது பணிச்சமை காரணமாகவே இந்த தொடரில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஒருவேளை பும்ராவால் அனைத்து போட்டிகளிலும் விளையாட முடியவில்லை என்றால் அது நிச்சயம் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக எதிர்வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் அவர் முன்னாள் பாகிஸ்தான் வீரரான வாசிம் அக்ரமின் சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்த இருக்கும் சாதனை யாதெனில் :
இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அகரம் இருக்கிறார். “SENA” நாடுகளில் மட்டும் 32 போட்டிகளில் விளையாடியுள்ள வாசிம் அக்ரம் 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து பும்ரா 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 145 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் பும்ரா வாசிம் அக்ரமின் சாதனையை சமன் செய்வார். அதோடு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் வாசிம் அக்ரமின் சாதனையை எளிதாக முறியடிப்பார். அதுமட்டுன்றி இந்த தொடரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் “SENA” நாடுகளில் 150 விக்கெட்டுகளை எடுத்த முதல் ஆசிய வேகப்பந்து வீச்சாளர் என்ற அரிய சாதனையையும் நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : நான் பாத்ததுலேயே தோனி தான் பெஸ்ட்.. ஹால் ஆஃப் பேம் விருதுபெற்ற தல தோனிக்கு – வாழ்த்து கூறிய தினேஷ் கார்த்திக்
கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட பும்ரா அதன்பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் வேளையில் இங்கிலாந்து தொடரிலும் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.