IND vs IRE : அயர்லாந்து டி20 தொடரில் சரித்திர சாதனையுடன் களமிறங்கி கம்பேக் கொடுக்கப் போகும் பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் வென்ற இந்தியா கடைசியாக நடைபெற்ற டி20 தொடரில் தோல்வியை சந்தித்து நாடு திரும்பியுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் இல்லாமல் விளையாடிய அந்த தொடரில் தோல்வி கிடைத்தாலும் தற்சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் நிலவும் இடது கை பேட்ஸ்மேன்களின் பஞ்சத்தை தீர்க்கும் வகையில் ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற தரமான இளம் வீரர்கள் கிடைத்துள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது.

இதைத்தொடர்ந்து அயர்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் 3 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் விராட் கோலி போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோருடன் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா போன்ற முழுக்க முழுக்க இளம் வீரர்களுடன் கூடிய இந்திய அணி களமிறங்குகிறது. அதை விட இந்த இளம் அணியை ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக தலைமை தாங்கி வழி நடத்த உள்ளது அனைவரிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சாதனையுடன் பும்ரா:
ஏனெனில் 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்து முதன்மை பவுலராக உருவெடுத்துள்ளார். இருப்பினும் 2022 ஜூலை மாதம் நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயத்தை சந்தித்த அவர் மீண்டும் 2 முறை குணமடைந்து காயமடைந்து வெளியேறியது 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை தொடர்ந்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

அந்தளவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் துருப்புச் சீட்டாக கருதப்படும் அவர் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் முழு ஃபார்முடன் களமிறங்குவதற்கு தயாராகி பயிற்சிகளை எடுக்கும் வகையில் இந்த தொடரில் கேப்டனாக விளையாட உள்ளார். சொல்லப்போனால் இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தும் முதல் பவுலர் என்ற தனித்துவமான சாதனையையும் அவர் படைக்க உள்ளார். கடந்த 2006இல் முதல் முறையாக ஜொகன்ஸ்பர்க் நகரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய வரலாற்றின் முதல் டி20 போட்டியில் வீரேந்திர சேவாக் இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்.

- Advertisement -

அதை தொடர்ந்து அனுபவமில்லாமலேயே கேப்டனாக பொறுப்பேற்று 2007 டி20 உலக கோப்பையை வென்ற தோனி 2016 வரை இந்தியாவை தலைமை தாங்கினார். அதற்கிடையே சுரேஷ் ரெய்னா, அஜிங்கிய ரகானே ஆகியோர் தற்காலிக கேப்டன்களாக செயல்பட்ட நிலையில் 2017 முதல் 2021 வரை விராட் கோலி மீண்டும் இந்தியாவை நிரந்தர கேப்டனாக வழி நடத்தினார். அவரைத் தொடர்ந்து தற்போது முழு நேர கேப்டனாக ரோகித் சர்மா இருக்கும் நிலையில் அதற்கிடையே ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தற்காலிக கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.

அதாவது 2006 முதல் தற்போது வரை இந்தியாவை மொத்தம் 10 வீரர்கள் கேப்டனாக வழி நடத்தியுள்ளனர். அதில் சேவாக், தோனி, ரகானே, ரெய்னா, விராட் கோலி, பண்ட், ராகுல், தவான், ரோஹித் சர்மா ஆகிய 9 வீரர்கள் பேட்ஸ்மேன்களாகவும் ஹர்திக் பாண்டியா ஆல் ரவுண்டராகவும் இந்தியாவை கேப்டனாக வழி நடத்தினர். ஆனால் தற்போது ஜஸ்பிரித் பும்ரா தான் டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக ஒரு பந்து வீச்சாளராக இந்தியாவை 11வது கேப்டனாக வழி நடத்த உள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் கேப்டனான பும்ராவிற்கு காத்திருக்கும் சவால்கள் – சாதிப்பாரா?

பொதுவாகவே பவுலர்கள் அதிகமாக காயத்தை சந்திப்பார்கள் என்பதாலேயே பேட்ஸ்மேன்கள் கேப்டனாக நியமிக்கப்படுவது வழக்கமாகும். ஆனால் அதையும் தாண்டி தம்முடைய திறமையால் இன்றியமையாத வீரராக உருவெடுத்துள்ள பும்ரா ஏற்கனவே கடந்த 2022 ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ரத்து செய்யப்பட்ட 5வது போட்டியில் கபில் தேவை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை கேப்டனாக வழி நடத்திய 2வது பவுலர் என்ற சரித்திர சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement