
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. முன்னதாக அந்தப் போட்டியை காண்பதற்கு இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ரசிகனாக துபாய் மைதானத்திற்கு வந்திருந்தார்.
தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் தனது வித்தியாசமான பவுலிங் ஆக்சன் அனைத்து பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருகிறார். அப்படிப்பட்ட அவர் சமீபத்திய ஆஸ்திரேலிய தொடரின் கடைசிப் போட்டியில் காயத்தைச் சந்தித்தார். அதனால் இந்தத் தொடரிலிருந்து விலகிய அவர் காயத்திலிருந்து குணமடையும் வேலைகளையும் தாண்டி இந்தியாவுக்காக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆதரவு கொடுக்க வந்தார்.
அப்போது அவருக்கு ஐசிசி விருதுகளை தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா வழங்கினார். 2024ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஜஸ்ப்ரித் பும்ரா அற்புதமாக பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார். அதனால் ஐசிசி 2024ஆம் ஆண்டின் சர்வதேச கிரிக்கெட் வீரர் என்ற விருதை அவர் வென்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பௌலிங் செய்த அவர் ஐசிசி பவுலர்கள் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார். அதன் காரணமாக ஐசிசி 2024 டெஸ்ட் போட்டிகளின் சிறந்த வீரர் என்ற விருதையும் பும்ரா வென்றதாக அறிவிக்கப்பட்டது. அது போக ஐசிசி 2024 கனவு டெஸ்ட் அணியிலும் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பிடித்திருந்தார்.
மேலும் 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக ஐசிசி 2024 சர்வதேச டி20 கனவு அணியிலும் ஜஸ்ப்ரித் பும்ரா இடம் பிடித்திருந்தார். அந்த 2 கனவு அணிகளிலும் இடம் பிடித்ததற்கான இளசிவப்பு, பச்சை தொப்பிகளை ஜெய் ஷா வழங்கினார்.
இதையும் படிங்க: முதல் ஓவரிலேயே 5 ஒய்ட் போட்டுத் தள்ளிய ஷமி.. 4 பவுலர்கள், 8 சாதனைகளை முந்தி மோசமான சாதனை
2024 சிறந்த வீரருக்கான சர் சோபர்ஸ் கோப்பை, 2024 சிறந்த டெஸ்ட் வீரருக்கான கோப்பையும் பும்ராவுக்கு வழங்கப்பட்டது. அதை தம்முடைய மனைவி சஞ்சனா கணேஷுடன் சேர்ந்து பும்ரா வாங்கிக்கொண்டார். அந்த வகையில் கடந்த வருடத்தின் நாயகனாக ஜொலித்த அவர் விரைவில் குணமாகி இந்த வருடமும் தொடர்ந்து இந்தியாவுக்காக வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.