இங்கிலாந்து நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை 12500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவர் 35 சதங்கள் அடித்துள்ளார். அதன் வாயிலாக இங்கிலாந்துக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் மற்றும் ரன்களை குவித்த வீரர் என்ற அலஸ்டர் குக் சாதனையை உடைத்த அவர் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
தற்போது 33 வயது மட்டுமே நிரம்பியுள்ள ஜோ ரூட் இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் இன்னும் அவர் 3000 – 4000 ரன்கள் குவிப்பதற்கு வாய்ப்புள்ளது. அதை செய்தால் சச்சின் டெண்டுல்கரை (15921 ரன்கள்) முந்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை ரூட் படைக்க பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரே பவுலர்:
இந்நிலையில் உலகின் அனைத்து பவுலர்களையும் ஜோ ரூட் சிறப்பாக எதிர்கொண்டு விளையாடி வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா மட்டுமே ரூட்டுக்கு சவாலை கொடுத்து சொற்ப ரன்களில் அவுட்டாக்குவதாக மைக்கேல் வாகன் கவலை தெரிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் வரும் 2025 ஜூன் மாதம் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் இங்கிலாந்து 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
எனவே அந்தத் தொடரில் பும்ராவை சமாளிக்க திட்டங்களை வகுத்து தயாராக இருக்குமாறு ஜோ ரூட்டுக்கு யோசனை கொடுக்கும் மைக்கேல் வாகன் இது பற்றி டெலிகிராப் இணையத்தில் கூறியுள்ளது பின்வருமாறு. “ஜோ ரூட் பந்தை வேகமாக எடுத்து அடிக்கிறார் என்பது அவருக்கு எக்ஸ்ட்ரா நேரத்தை வழங்குகிறது. இருப்பினும் அவர் வரிசைப்படுத்தாத ஒரே பவுலர் ஜஸ்ப்ரித் பும்ரா என்று நான் நினைக்கிறேன்”
2025 இந்திய தொடர்:
“ஆனால் ஜோ ரூட் அவரை அடுத்த கோடைகாலத்தில் எப்படி சமாளிப்பது என்பது பற்றி இப்போதே யோசித்துக் கொண்டிருப்பார். அது திறன் பற்றியது கிடையாது திட்டத்தைப் பற்றியது. சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுத்தேன். அப்போது அவுட்டாகும் அனைத்து வழிகளையும் ஜீரோவாக்க முயற்சித்து வருவதாக ஜோ ரூட் என்னிடம் சொன்னார்”
இதையும் படிங்க: இந்திய அணியில் இனி இவரை அசைக்க முடியாது.. வருண் சக்ரவர்த்தி செய்த தரமான சம்பவம் – விவரம் இதோ
“கடந்த வருடங்களில் தம்மிடமிருந்த டெக்னிக்கல் தவறுகளை அவர் தற்போது சரி செய்துள்ளார். அதனால் வேகம் அல்லது சுழலுக்கு எதிராக அவர் எளிதாக அவுட்டாக வாய்ப்பில்லை. எனவே தற்சமயத்தில் பவுலர்கள் ஜோ ரூட் விக்கெட்டை எடுக்க அவர் தவறு செய்வதற்காக காத்திருக்கிறார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரூட்டை 3 முறை பும்ரா அவுட்டாக்கியது குறிப்பிடத்தக்கது.



