
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது இன்று டிசம்பர் 9-ஆம் தேதி கட்டாக் நகரில் துவங்குகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்க அணி கைப்பற்றியது. அதற்கடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இப்படி இரண்டு தொடர்களையும் இரு அணிகளும் மாற்றி மாற்றி வெற்றி பெற்ற வேளையில் 5 போட்டிகள் கொண்ட மிக முக்கியமான டி20 தொடர் நடைபெறவுள்ளது பலரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இந்த டி20 தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் மீண்டும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கம்பேக் கொடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய அவருக்கு ஒருநாள் தொடரின் போது ஓய்வு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் இன்று கட்டாக் நகரில் நடைபெற இருக்கும் முதலாவது டி20 போட்டியில் பும்ரா மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் இந்திய அணிக்காக முதல் பந்துவீச்சாளராக ஒரு இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை டி20 போட்டிகளில் 99 விக்கெட் வீழ்த்தியுள்ள அவர் இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினால் 100 விக்கெட்டுகளை சர்வதேச டி20 போட்டிகளில் கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளராக மாறுவார்.
இதையும் படிங்க : இப்போவே செதுக்கிறோம்.. ராணாவுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்குவது ஏன்? 2 வருட பிளானை பகிர்ந்த கம்பீர்
அதுமட்டும் இன்றி ஏற்கனவே ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள பும்ரா மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.