இந்தியாவின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா எப்போது குணமடைந்து வருவார் என்பதே தற்சமயத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் புரியாத புதிராகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஐபிஎல் தொடரில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்தார். குறிப்பாக 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் போட்டியின் எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக பார்க்கப்படுகிறார்.
அப்படிப்பட்ட அவர் 2022 ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது காயமடைந்து வெளியேறினார். அது அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற 2022 ஆசிய கோப்பையில் இந்தியாவின் தோல்வியில் எதிரொலித்ததால் அடுத்ததாக நடைபெறவிருந்த டி20 உலக கோப்பையில் எப்படியாவது விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அவரை அவசரப்படுத்தியது. அதனால் முழுமையாக குணமடைவதற்கு முன்பாகவே அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் ஓரிரு போட்டிகளில் விளையாடிய போது முதுகு பகுதியில் காயமடைந்த அவர் 2022 டி20 உலக கோப்பையில் வெளியேறியது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
கடைசி நேர ட்விஸ்ட்:
அந்த நிலையில் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்ள துவங்கிய பும்ரா முழுமையாக குணமடைந்து விட்டதால் 2023 ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்தது. ஆனால் அவசரமாக களமிறங்கி மீண்டும் காயமடைந்து விடக்கூடாது என்பதற்காக அத்தொடரிலிருந்து பும்ரா விலகுவதாக அடுத்த நாளே அறிவித்த பிசிசிஐ முழுமையாக குணமடைய போதிய நேரம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தது.
அந்த வகையில் பும்ரா இன்னும் முழுமையாக குணமடையாததால் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்றும் நேரடியாக 2023 ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என்றும் செய்திகள் வெளியானது. அதனால் கடுப்பான ரசிகர்கள் இவர் நாட்டுக்காக காயமடைந்து விடுவார் ஐபிஎல் தொடரில் பணத்துக்காக மட்டும் தொடர்ந்து விளையாடுவார் என்று தங்களது நீண்ட கால விமர்சனங்களை கடந்த சில வாரங்களாக வலுவாக முன்வைத்து கலாய்த்து வந்தனர்.
ஏனெனில் 2019 – 2021 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 30% போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் அதே காலகட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 95 – 99% போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா இன்னும் 100% முழுமையாக குணமடையாத காரணத்தால் அத்தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்று பிரபல கிரிக்பஸ் இணையத்தில் அதிகாரப்பூர்வமான செய்தி வெளியாகியுள்ளது.
The India pacer is doubtful to play in the #IPL2023 in March-May as well as the WTC final in June, if India make it. @vijaymirror has more
— Cricbuzz (@cricbuzz) February 27, 2023
தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருக்கும் பும்ரா தன்னுடைய முதுகு காயத்தில் முழுமையாக குணமடைந்த உணர்வை பெறவில்லை என்று தெரிய வருகிறது. அதற்கு இன்னும் 2 – 3 மாதங்களுக்கும் மேல் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முழுமையாக குணமடையாமல் அவர் மீண்டும் களமிறங்கி மீண்டும் காயத்தை சந்திக்க என்சிஏ விரும்பவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் காரணமாக 2023 ஐபிஎல் தொடர் மட்டுமல்லாது ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: அதுக்கு மதிப்பு கொடுக்கலைனா உங்க அதிரடி ஆட்டம் வேலைக்கு ஆகாது – இந்தியாவை எச்சரிக்கும் இங்கிலாந்துக்கு அஷ்வின் பதிலடி
எனவே அவரை மேற்கொண்டு அவசரப்படுத்தாமல் நேரடியாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட வைக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. இதனால் 2023 உலகக்கோப்பையில் தான் பும்ரா மீண்டும் களமிறங்கி விளையாடுவார் என்பதை அறியும் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் ஏற்கனவே கடந்த வருடம் புள்ளி பட்டியலில் கடைசி இடம் பிடித்த காரணத்தால் இப்போதே கலக்கத்தை சந்தித்துள்ளார்கள்.