
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா அந்த சரித்திர வெற்றியை பெறுவதற்கு ஜஸ்ப்ரித் பும்ரா மிகவும் முக்கிய பங்காற்றினார். ஏனெனில் ஃபைனல் உட்பட தேவைப்படும் நேரங்களில் விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று இந்தியாவின் சரித்திர வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
அதனால் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருப்பதாக வாசிம் அக்ரம் பாராட்டினார். மேலும் பும்ரா தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரக்கூடிய பவுலர் என்று விராட் கோலி பாராட்டியிருந்தார். அதே போல பும்ரா தற்சமயத்தில் தமக்கும் மிகவும் பவுலர் என்று ஜாம்பவான் எம்.எஸ். தோனி பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் காயங்களை கடந்து கம்பேக் கொடுத்துள்ள பும்ரா கடந்த 6 வருடங்களாக ஆல் ஃபார்மட் பவுலராக அசத்தி வருகிறார் என்று ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் தூங்க முடியாத அளவுக்கு எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு அவர் அச்சுறுத்தலை கொடுத்து வருவதாகவும் பாண்டிங் தெரிவித்துள்ளார்.
மேலும் கிளன் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் போல நீண்ட காலம் விளையாடும் தன்மையை பும்ரா கொண்டிருப்பதாகவும் பாண்டிங் கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியதற்கு பின்வருமாறு. “கடந்த 5 – 6 வருடங்களாக பும்ரா சிறந்த ஆல் ஃபார்மட் பவுலர் என்பதை நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அவர் காயமடைந்ததால் கொஞ்சம் பயம் இருந்தது”
“இவரால் அதே பழைய அளவுக்கு கம்பேக் கொடுக்க முடியுமா? என்ற கேள்வி இருந்தது. ஆனால் காயத்திலிருந்து அவர் இன்னும் சிறப்பாக கம்பேக் கொடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். மற்ற வீரர்களிடம் கேட்பதை வைத்தே அவரைப் போன்ற வீரர்களின் உண்மையான அளவீட்டை பெற முடியும். அந்த வகையில் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் அவரைப் பற்றி நீங்கள் பேசும் போது “இல்லை பும்ரா நைட்மேர்” என்று சொல்வார்கள்”
“அவருக்கு எதிராக விளையாடும் போது என்ன நடக்கும் என்று தெரியாது என பேட்ஸ்மேன்கள் சொல்வார்கள். ஏனெனில் அவருடைய பந்துகள் ஸ்விங் ஆகிறது, வேகமாக செல்கிறது. அவரால் உள்ளேயும் வெளியேயும் வீச முடியும். சமீபத்திய டி20 உலகக் கோப்பையில் பார்த்த போது அவருடைய வேகம், துல்லியம் அப்படியே இருக்கிறது. எதுவும் மாறவில்லை. உண்மையில் அவர் ஒவ்வொரு வருடமும் இன்னும் சிறப்படைகிறார்”
இதையும் படிங்க: ஆப்கானிஸ்தானுக்கு நடந்த அநியாயம்.. இந்தியா – பாகிஸ்தான் உட்பட 2024 டி20 உ.கோ ரேட்டிங்கை வெளியிட்ட ஐசிசி
“அப்படி உங்களிடம் திறமை மற்றும் கன்சிஸ்டென்சி இருந்தால் உங்களால் கிரேட் பிளேயராக வர முடியும். மெக்ராத், ஆண்டர்சன் ஆகியோரை பாருங்கள். அவர்கள் தங்கள் திறமையைப் பிடித்து நீண்ட காலமாக விளையாடியதாலேயே மற்றவர்களிடமிருந்து தனித்துவமாக திகழ்கின்றனர்” என்று கூறினார்.