- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SL : இலங்கை அணிக்கெதிரான தொடரில் திடீரென இணைக்கப்பட்ட நட்சத்திர வீரர் – ரசிகர்களுக்கு நற்செய்தி

2023 புதிய வருடத்தில் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலக உலக கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்திய கிரிக்கெட் அணி செயல்பட உள்ளது. ஏனெனில் கடந்த வருடம் வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்ற இந்தியா அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோற்றது. மேலும் கடைசியாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா கடந்த 10 வருடங்களாக ஐசிசி கோப்பை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. அதற்கு இந்த வருடம் கிடைத்துள்ள 2 வாய்ப்பில் ஏதேனும் ஒரு கோப்பையை வென்று முற்றுப்புள்ளி வைக்க வேண்டியுள்ள இந்திய அணிக்கு பந்து வீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா அவசியமாகிறார்.

ஏனெனில் 2016இல் அறிமுகமாகி தன்னுடைய வித்தியாசமான பவுலிங் ஆக்சனை வைத்து உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையும் திணறடித்த அவர் 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் அற்புதமாக செயல்பட்டு முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அவதரித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதனால் இந்திய பந்து வீச்சு துறையின் தவிர்க்க முடியாத வீரராக உருவெடுத்த அவர் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே முதல் டெத் ஓவர்கள் வரை அனைத்து நேரங்களிலும் துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய கருப்பு குதிரையாக உருவானார்.

இந்திய அணியில் பும்ரா:
அதனாலேயே அவரைப் போன்ற முக்கிய வீரர் உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக நிறைய தொடர்களில் பிசிசிஐ ஓய்வு கொடுத்து வந்தது. ஆனால் அதையும் தாண்டி 2022 ஆசியக் கோப்பைக்கு முன்பாக நடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் காயமடைந்து வெளியேறிய அவர் அதிலிருந்து குணமடைந்து வந்த போதிலும் ஆஸ்திரேலியாவில் 2022 டி20 உலக கோப்பைக்கு முன்பாக மீண்டும் காயமடைந்து வெளியேறியது இந்தியாவுக்கு அடுத்தடுத்த தோல்விகளை கொடுத்தது.

மேலும் முதுகு பகுதியில் காயத்தை சந்தித்த அவர் குணமடைவதற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும் என்று செய்திகள் வெளியானது. ஆனால் 2019 முதல் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக 99% போட்டிகளில் விளையாடிய அவர் அதே காலகட்டத்தில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் 30 – 50% போட்டிகளில் மட்டுமே விளையாடியதை பார்த்த ரசிகர்கள் இவர் இந்தியாவுக்காக காயமடைந்து வெளியேறுவார் ஐபிஎல் என்றால் தொடர்ந்து விளையாடுவார் என்று விமர்சித்தார்கள். அந்த வகையில் 2023 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு தான் அவர் மீண்டும் விளையாடுவார் என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டிருந்த அவர் காயத்திலிருந்து குணமடைந்து கடந்த சில வாரங்களாக களமிறங்கி பயிற்சிகளை மேற்கொண்டார். தற்போது அவரது உடல் தகுதியையும் பயிற்சியையும் சோதித்த என்சிஏ இந்தியாவுக்கு விளையாடுவதற்கு தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. அதை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ உடனடியாக வரும் ஜனவரி 10 முதல் 15 வரை இலங்கைக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ராவை சேர்த்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலக கோப்பைக்கு தயாராகும் மும்முரமான பயணம் இந்த இலங்கைத் தொடரிலிருந்து தூங்குவதால் உடனடியாக அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது பின்வருமாறு.

“இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை தேர்வுக்குழு சேர்த்துள்ளது. பும்ரா செப்டம்பர் 2022 முதல் கிரிக்கெட்டிலிருந்து வெளியேறினார் மற்றும் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 டி20 உலகக் கோப்பையில் இருந்தும் விலகினார். தற்போது என்சிஏவால் அவர் உடல் தகுதி பெற்றுள்ளார்.
அவர் விரைவில் இந்தியா ஒருநாள் அணியில் இணைவார்” என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: IND vs SL : இலங்கை அணிக்கெதிரான தொடரில் திடீரென இணைக்கப்பட்ட நட்சத்திர வீரர் – ரசிகர்களுக்கு நற்செய்தி

முன்னதாக அவர் இல்லாமல் இங்கிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரை இறுதி உட்பட சமீப காலங்களில் இந்தியா பந்து வீச்சில் திண்டாடி வருகிறது. எனவே அவர் மீண்டும் திரும்பி உள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -
Published by