
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானிஸ்தான், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்கும் 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் செப்டம்பர் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான அட்டவணையும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன.
அதனை தொடர்ந்து இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்திய அணியும் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் நான்காம் தேதி துபாய் புறப்பட இருக்கிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இருந்தது. ஏனெனில் அண்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியில் இடம் பிடித்திருந்த அவர் பணிச்சுமை காரணமாக மூன்று போட்டியில் மட்டுமே விளையாடி இருந்தார்.
இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் அவரால் முழுவதுமாக விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி சென்ற அவர் அங்கு உடற்தகுதியை நிரூபித்துள்ளதன் காரணமாக இந்த ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பதினை உறுதி செய்துள்ளார்.
மேலும் இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் அவர் நிச்சயம் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. டெஸ்ட் போட்டிகளை காட்டிலும் டி20 போட்டிகளில் ஒரு போட்டிக்கு நான்கு ஓவர்கள் மட்டுமே வீச வேண்டும் என்பதனால் நிச்சயம் இந்த ஆசிய கோப்பை தொடரில் அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இருவரில் யார் பிளேயிங் லெவனில் விளையாடுவார்கள்? – ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்த 2025 ஆசிய கோப்பை தொடரில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணியானது தங்களது முதல் போட்டியில் செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணியை துபாய் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.