மீண்டும் போராடி தோற்ற மும்பை தோல்வி ! ஆனாலும் வேகத்தில் தங்கமாய் புதிய டி20 சாதனை படைத்த பும்ரா

Jasprith Bumrah
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 17-ஆம் தேதி நடைபெற்ற 65-ஆவது லீக் போட்டியில் மும்பை எதிர்கொண்ட ஹைதராபாத் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஐதராபாத் 20 ஓவர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 193/6 ரன்கள் சேர்த்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் அவுட்டானாலும் அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதியுடன் சேர்ந்த மற்றொரு இளம் தொடக்க வீரர் பிரியம் கார்க் 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்.

Rahul Tripati

- Advertisement -

இதில் பிரியம் கார்க் 42 (26) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய நிக்கலஸ் பூரனுடன் கைகோர்த்த ராகுல் திரிப்பாதி 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுப்படுத்தினார். 9 பவுண்டரி 3 சிக்சருடன் 76 (44) ரன்களில் அவர் ஆட்டமிழந்த பின் இறுதியில் நிக்கோலஸ் பூரன் 38 (22) ரன்களில் அவுட்டானர். மும்பை சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரமந்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

மும்பை போராட்டம்:
அதை தொடர்ந்து 194 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு சுமாரான பார்மில் தவித்துக்கொண்டிருக்கும் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா – இஷான் கிசான் ஆகியோர் இந்த முறை அசத்தலாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றிக்கு நல்ல அடித்தளமிட்டனர். 11 ஓவர்கள் வரை அசத்திய இந்த ஜோடியில் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 48 (36) ரன்களில் அவுட்டான கேப்டன் ரோகித் சர்மா முதல் அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட போது அடுத்த ஓவரிலேயே இசான் கிசான் 43 (34) ரன்களில் அவுட்டானார்.

MI vs SRH Bhuvaneshwar Kumar TIm David

இருப்பினும் அடுத்து வந்த டேனியல் சாம்ஸ் 15 (11) திலக் வர்மா 8 (9) ட்ரிஷன் ஸ்டப்ஸ் 2 (2) ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் திடீரென்று மும்பைக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும் கடைசி 4 ஓவர்களில் வெற்றிக்கு 54 ரன்கள் தேவைப்பட்ட போது களமிறங்கி அதிரடி காட்டிய டிம் டேவிட் நடராஜன் வீசிய 18-வது ஓவரில் 4 சிக்சர்கள் உட்பட 26 ரன்களை விளாசியதால் மும்பை வெற்றி பெற்றுவிடும் என அனைவரும் நினைத்தனர். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் நடராஜன் அவரை ரன் அவுட் செய்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அதை பயன்படுத்திய புவனேஸ்வர் குமார் 19-வது ஓவரில் 1 ரன்கள் கூட கொடுக்காத நிலையில் கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்ட போது ரமந்தீப் சிங் 2 சிக்ஸர்களை பறக்க விட்ட போதிலும் 20 ஓவர்களில் 190/7 ரன்கள் மட்டுமே எடுத்த மும்பை போராடி தோற்றது. ஹைதராபாத் சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகள் எடுக்க பேட்டிங்கில் 76 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ராகுல் திரிபாதி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இதனால் பங்கேற்ற 13 போட்டிகளில் ஹைதெராபாத் 6-வது வெற்றியை பதிவு செய்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு 99% குறைவாகவே காணப்படுகிறது.

Jasprith Bumrah vs KKR

தங்கமாய் பும்ரா:
மறுபுறம் ஏற்கனவே 8 தொடர் தோல்விகளால் ஐபிஎல் 2022 தொடரில் முதல் அணியாக வெளியேறிய மும்பை பங்கேற்ற 13 போட்டிகளில் 10-வது தோல்வியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை வலுவாகப் பிடித்துள்ளது. இந்த வருடம் முழுவதும் அந்த அணியின் பந்துவீச்சு மோசமாக இருந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

இருப்பினும் அந்த அணிக்காக விளையாடும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒவ்வொரு போட்டியிலும் இதர பவுலர்களை காட்டிலும் சிறப்பாக பந்துவீசி தனித்துவமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் நேற்றைய போட்டியில் 4 ஓவர்களில் 32 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்த அவர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 250 விக்கெட்டுகளை எடுத்து முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய ஆல் – டைம் சாதனை படைத்துள்ளார்.

MI Jaspirt Bumrah

கடந்த 2013இல் ஐபிஎல் தொடரில் மும்பைக்காக முதல் முறையாக அறிமுகமாகிய அசத்த தொடங்கிய அவர் அதன் வாயிலாக இந்தியாவிற்காக சிறப்பாக விளையாடி இன்று 3 வகையான இந்திய அணியின் நம்பர் 1 பந்து வீச்சாளராக வலம் வருகிறார். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 142* விக்கெட்டுகள் இந்தியாவிற்காக 67* விக்கெட்டுகள் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் 41* என மொத்தம் 250 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் இந்த புதிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு முன்பிலிருந்தே விளையாடி வரும் புவனேஸ்வர் குமார் போன்றவர்களை காட்டிலும் 250 விக்கெட்டுகளை தொட்ட முதல் இந்திய தங்கமாய் சாதித்துள்ளது உண்மையாகவே அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் தொடரில் பும்ராவின் மிகப்பெரிய சாதனையை தகர்த்த உம்ரான் மாலிக் – அப்படி என்ன சாதனை தெரியுமா?

அந்த பட்டியல் இதோ:
1. ஜஸ்பிரித் பும்ரா : 250*
2. புவனேஸ்வர் குமார் : 224
3. ஜெயதேவ் உனட்கட் : 201
4. வினய் குமார் : 194
5. இர்பான் பதான் : 173

Advertisement