நாடு முக்கியம் தான் ஆனா பணம் அதை விட முக்கியம் – வதந்தியை உண்மையாக்கும் அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து வீரர்

Roy
- Advertisement -

உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்து கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக கொட்டிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கிய உரிமையாளர்களும் கடந்த 15 வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சி கண்டு பன்மடங்கு வளர்ந்துள்ளனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ், தென்னாபிரிக்கா, அமீரகம் போன்ற வெளிநாடுகளில் தங்களுடைய கிளை அணிகளை வாங்கியுள்ள அவர்கள் அடுத்ததாக கிரிக்கெட் மிகவும் பிரபலமில்லாத அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் டி20 தொடரிலும் கால் பதித்துள்ளனர். குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற 4 ஐபிஎல் நிர்வாகங்கள் அத்தொடரில் தங்களது கிளைகளை வாங்கியுள்ளன.

அதில் கொல்கத்தா நிர்வகிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்காக நட்சத்திர இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் சுமார் யூரோ 300,000 மதிப்பில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று இங்கிலாந்தின் பிரபல டெய்லி மெயில் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. அதற்காக இங்கிலாந்துக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்களுக்கான மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து ஜேசன் ராய் வெளியேறுவதாகவும் அந்த செய்தி தெரிவித்தது. அப்படி நாட்டை விட பணத்துக்காக டி20 தொடரே முக்கியம் என்ற வகையில் அவர் எடுத்த முடிவு பெரும்பாலான ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

- Advertisement -

வரும் ஆனா வராது:
இருப்பினும் அந்த செய்தி போலி என்பதை உணர்த்தும் வகையில் இங்கிலாந்து அணியிலிருந்து மொத்தமாக வெளியேறவில்லை என்று ஜேசன் ராய் ட்விட்டரில் பதிலடி கொடுத்தார். குறிப்பாக தம்முடைய கேரியரில் நாட்டுக்காக விளையாடுவதை பெருமையாக கருதுவதாக தெரிவிக்கும் அவர் இங்கிலாந்துக்காக வரும் காலங்களில் தொடர்ந்து விளையாடுவதே தம்முடைய முன்னுரிமை என்று தெளிவுப்படுத்தினார். ஆனால் அதே சமயம் அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது உண்மை தான் என்று கூறியுள்ள அவர் அதற்கு இங்கிலாந்து வாரியம் அனுமதி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் 2023 உலகக் கோப்பை உட்பட தொடர்ந்து இங்கிலாந்துக்காக பெருமையுடன் விளையாட இருப்பதாக தெளிவுபடுத்தியுள்ளார். அந்த நிலையில் அமெரிக்காவில் நடைபெறும் தொடரில் விளையாடுவது பற்றி ஜேசன் ராய் ஏற்கனவே தங்களிடம் கேட்ட அனுமதியை கொடுப்பதாக இங்கிலாந்து வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் அமெரிக்காவில் விளையாடுவதற்காக இங்கிலாந்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்ற நிபந்தனையை ஜேசன் ராய் ஏற்றுக் கொண்டதாகவும் இங்கிலாந்து வாரியம் கூறியுள்ளது.

- Advertisement -

அதே சமயம் இது இங்கிலாந்துக்காக வருங்காலங்களில் ஜேசன் ராய் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்படுவதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்றும் அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மொத்தத்தில் ஜேசன் ராய் மற்றும் இங்கிலாந்து வாரியம் வெளியிட்டுள்ள இந்த 2 அறிக்கையுமே வரும் ஆனா வராது என்ற பிரபல தமிழ் நகைச்சுவை வசனத்தை பிரதிபலிக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் அமெரிக்காவில் விளையாடினாலும் இங்கிலாந்துக்காக வருங்காலங்களில் தொடர்ந்து விளையாடுவேன் என்று ஜேசன் ராய் கூறியுள்ளார்.

ஆனால் அதற்காக தங்களது அனுமதியை பெற்றாலும் அதற்காக மத்திய ஒப்பந்தத்தை ஜேசன் ராய் கைவிட்டு விட்டதாக இங்கிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது. இந்த 2 அறிக்கையின் பின்புலம் என்னவெனில் வருங்காலங்களில் இங்கிலாந்துக்கு விளையாட ஜேசன் ராய் தகுதியுடையவராக இருந்தாலும் அந்நாட்டு வாரியம் அவரை தேர்வு செய்யப்போவதில்லை. ஏனெனில் 2019 உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் சமீப காலங்களில் ஃபார்மை இழந்து தடுமாறுவதால் 2022 டி20 உலக கோப்பை உட்பட தொடர்ந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதனாலேயே வாய்ப்பு கிடைக்காத இங்கிலாந்து அணியிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் விளையாட ஜேசன் ராய் முடிவெடுத்துள்ளார். அதனால் ஏற்கனவே அவரைப் புறக்கணித்து வரும் இங்கிலாந்து வாரியம் பெருமைக்காக அறிக்கையில் இப்படி சொன்னாலும் வருங்காலங்களில் தேர்வு செய்யப்போவதில்லை. ஒருவேளை நியூசிலாந்து ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய ட்ரெண்ட் போல்ட் போல ஜேசன் ராய் மிகவும் மதிப்புமிக்கவராக நல்ல ஃபார்மில் இருந்தால் உலகக் கோப்பை போன்ற முக்கிய தொடரில் இங்கிலாந்து அவரை தேர்வு செய்யும்.

இதையும் படிங்க:WTC : ஐபிஎல் பரிசை மிஞ்சியதா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வின்னருக்கு ஐசிசி அறிவித்துள்ள பரிசு தொகை விவரம் இதோ

ஆனால் ஃபார்மின்றி தடுமாறும் அவரை இதை வைத்தே இனிமேல் இங்கிலாந்து கழற்றி விடும். அதனால் “வருவேன் ஆனால் வரமாட்டேன்” என்ற வகையில் பெயருக்காக இங்கிலாந்துக்கு வருங்காலங்களில் விளையாடுவேன் என்று தெரிவிக்கும் ஜேசன் ராய் தேர்வு செய்யப்பட மாட்டார் என்பதால் விளையாடப் போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement