
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என 49 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த ஆட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அக்சர் பட்டேலுக்கு பின்னர் வாஷிங்டன் சுந்தர் களமிறங்குவது தனக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும், வாஷிங்டன் சுந்தரிடம் இருக்கும் பேட்டிங் திறமைக்கு அவர் அக்சர் பட்டேலுக்கு முன்னதாகவே களத்திற்கு வந்து விளையாடலாம் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஜேசன் கில்லெஸ்பி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் ஏன் அக்சர் பட்டேலுக்கு பிறகு வந்து பேட்டிங் செய்கிறார் என்பது எனக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஏனெனில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் தாக்குதலுக்கு எதிர்த்து கொஞ்சமும் பயப்படாமல் அவர் பேட்டிங்கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவரிடம் இருக்கும் பேட்டிங் திறமைக்கு அவர் சற்று முன்கூட்டியே பேட்டிங் செய்ய களத்திற்கு வரலாம். அந்த அளவிற்கு அவர் ஒரு திறமையான வீரர் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. நான் சென்னையில் பயிற்சியாளராக இருந்தபோது வாஷிங்டன் சுந்தரிடம் நேரத்தை செலவிட்டுள்ளேன்.
அவரிடம் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதோடு பேட்டிங்கிலும் முதல் பந்தில் இருந்தே பவுலர்கள் மீது அழுத்தம் கொடுத்து விளையாடும் அளவிற்கு திறனும் இருக்கிறது. எனவே அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தன்னிடம் இருப்பதாகவும் ஜேசன் கில்லெஸ்பி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆசியக்கோப்பை விவகாரம்.. சூரியகுமார் யாதவ் மற்றும் ஹாரிஸ் ரவூப் ஆகியோர் மீது – ஐ.சி.சி எடுத்துள்ள நடவடிக்கை
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது டி20 போட்டியானது நாளை நவம்பர் 6-ஆம் தேதி கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.