கிரிக்கெட்டின் அந்த மோசமான விதிமுறையை தூக்குங்க, சொதப்பல் தோல்வியால் புலம்பும் ஆண்டர்சன் – கலாய்க்கும் ரசிகர்கள்

James-Anderson
- Advertisement -

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து தனது அதிரடி அணுகு முறையால் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் 2வது போட்டியிலும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்தை அனல் பறந்த கடைசி நாளில் கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காமல் கடைசி பந்து வரை போராடிய நியூசிலாந்து வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து 1 – 1 (2) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்தது. அப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் 435/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த இங்கிலாந்து நியூசிலாந்தை 256 ரன்களுக்கு சுருட்டியதால் ஃபாலோ ஆன் கொடுத்தது.

ஆனால் 2வது இன்னிங்ஸில் அபாரமாக பேட்டிங் செய்த நியூசிலாந்து 483 ரன்கள் குவித்து தக்க பதிலடி கொடுத்தது. இறுதியில் 258 ரன்களை துரத்திய இங்கிலாந்து 256/9 என்ற நிலையில் இருந்த போது கடைசி நேர பரபரப்பில் அபாரமாக பந்து வீசிய நெய்ல் வாக்னர் ஜேம்ஸ் ஆண்டர்சனை லெக் சைடு திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்க வைத்து அவுட்டாக்கினார். அதனால் வரலாற்றில் 30 வருடத்திற்கு பின் 2வது முறையாக வெறும் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற நியூசிலாந்து பாலோ ஆன் பெற்ற பின் வெற்றியை பதிவு செய்த 4வது அணி என்ற சாதனை படைத்தது.

- Advertisement -

ஆண்டர்சன் புலம்பல்:
குறிப்பாக 2001ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஆஸ்திரேலியாவை இந்தியா தோற்கடித்த மறக்க முடியாத ஃபாலோ ஆன் வெற்றிக்கு பின் அற்புதமான வெற்றியை பதிவு செய்த நியூஸிலாந்து உலக அளவில் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபாலோ ஆன் விதிமுறை மிகவும் மோசமானது என்று தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“பாலோ ஆன் என்பது மிகவும் மோசமானது. அது கிரிக்கெட்டின் மோசமான கண்டுபிடிப்பாகும். ஒருவேளை என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றால் ஃபாலோ ஆன் விதிமுறையை விரட்டி விடுவேன். அப்போட்டியில் 210 ஓவர்கள் நாங்கள் நேராக ஃபீல்டிங் செய்தோம் என்று நினைக்கிறேன். மேலும் வெலிங்டன் பிட்ச் போட்டி நடைபெறும் நடைபெற சிறப்பாக மாறக்கூடியது. அதனால் நியூசிலாந்து எந்த வகையிலும் எங்களை மிஞ்ச முடியாது என்பதால் நாங்கள் சேசிங் செய்வோம் என்று நினைத்தோம். இருப்பினும் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் சிறப்பாக விளையாடியது”

- Advertisement -

“நான் அவுட்டான அந்த பந்து எனது தலைக்கு மேல் பயணிப்பதை பார்த்தேன். அதனால் நான் ஸ்லோயர் லெக் அம்பயர் ராட் டக்கரை பார்த்தேன். அந்த பந்து என் தலைக்கு மேல் ஒரு அடி சென்றது போல் இருந்தது. ஆனால் அந்த அம்பயர் “சில்லியாக இருக்காதீர்கள் நண்பரே. அது உங்கள் தலைக்கு மேல் ஒரு அடி கூட செல்லவில்லை” என்பது போல் ரியாக்சன் கொடுத்தார். ஆனால் கிரிக்கெட்டின் மற்ற நேரங்களில் அது ஒய்ட் கொடுக்கப்பட்டிருக்கும்” என்று கூறினார். இதைப் பார்க்கும் ரசிகர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக 40 வயதை நம்பராக்கி உலக சாதனை படைத்து வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட்டின் விதிமுறைகளை புரிந்து கொள்ளாமல் தோல்வியால் இப்படி புலம்புவதாக சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.

ஏனெனில் ஃபாலோ ஆன் என்பது ஒரு டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 2வது பேட்டிங் செய்யும் அணியை தனது அபார பந்து வீச்சால் கட்டுப்படுத்தி 200 ரன்களை முன்னிலையாக பெறும் போது தேவைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய விதியாகும். அதை தங்களது திறமை மற்றும் போட்டியின் சூழ்நிலையை நம்பி பயன்படுத்தினால் அற்புதமான இன்னிங்ஸ் வெற்றி பெறலாம். ஆனால் எதிரணியை குறைத்து மதிப்பிட்டு என்ன செய்து விடப்போகிறார்கள் என்ற மமதையில் பயன்படுத்தினால் இது போன்ற வரலாற்றின் அவமான தோல்வியை சந்திக்க நேரிடும்.

இதையும் படிங்க:IND vs AUS : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பாண்டிங், சச்சினை மிஞ்சி விராட் கோலி படைக்க உள்ள 2 அசத்தல் சாதனைகள் இதோ

அப்படி நியூசிலாந்து என்ன செய்து விடப்போகிறது என்ற மமதையில் உங்களை யார் ஃபாலோ ஆன் கொடுக்க சொன்னது? என்று அவரை கலாய்க்கும் ரசிகர்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் விதிமுறையை நீக்குமாறு சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றும் கிண்டலடிக்கிறார்கள்.

Advertisement