முடிவுக்கு வந்த பட் கமின்ஸ் 1466 நாட்கள் ராஜாங்கம், அஷ்வினுக்கு டாட்டா காட்டி 86 வருட புதிய வரலாறு படைத்த ஆண்டர்சன்

James Andersoon Ashwin Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா வரும் ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் 99% உறுதி செய்துள்ளது. அதே போல் ஏற்கனவே புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவும் கிட்டத்தட்ட பைனலுக்கு தகுதி பெற்று விட்டது. மறுபுறம் 2019இல் இந்தியாவை தோற்கடித்து உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்த நியூசிலாந்து அதன் பின் சந்தித்த தொடர் தோல்விகளால் இம்முறை பைனல் வாய்ப்பை இழந்து விட்டது.

அதே போல சொந்த மண்ணில் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெறும் ஏற்கனவே இழந்த இங்கிலாந்து தற்போது நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்று 1 – 0* (2) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த 2 தொடர்களுக்கு மத்தியில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

- Advertisement -

சாதனை படைத்த ஆண்டர்சன்:
அதில் இந்தியாவிடம் தோல்வியில் சந்தித்தாலும் தொடர்ந்து 126 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் (115) இங்கிலாந்து 3வது இடத்திலும் (107) உள்ளன. அதே போல் பேட்டிங் தரவரிசையில் மார்னஸ் லபுஸ்ஷேன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சுமாராக செயல்பட்டும் தொடர்ந்து டாப் 2 பேட்ஸ்மேன்களாக உள்ளனர். இந்தியா சார்பில் ரிசப் பண்ட், ரோகித் சர்மா ஆகியோர் 6, 7 ஆகிய இடங்களில் உள்ளனர். ஆனால் பவுலிங் தரவரிசையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் கேப்டனாக முன்னின்று தாக்கத்தை ஏற்படுத்த தவறிய ஆஸ்திரேலியாவின் பட் கமின்ஸ் 1466 நாட்கள் கழித்து முதலிடத்தை கோட்டை விட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறிய அவர் இந்தியாவுக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் சொதப்பலாக செயல்பட்டதால் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மறுபுறம் அதே தொடரில் 14 விக்கெட்களை சாய்த்து ஆஸ்திரேலியாவுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வரும் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மவுண்ட் மவுங்கனி நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 7 விக்கெட்களை சாய்த்தது மட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே வயதை வெறும் நம்பராக்கி மிரட்டலாக செயல்பட்டு வரும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் பட் கமின்ஸை முந்தி உலகின் புதிய நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகமான அவர் வயது அதிகரிக்க அதிகரிக்க பழைய சரக்கை போல தனது அனுபவத்தால் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்து வீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார். அந்த வரிசையில் தற்போது 40 என்ற தன்னுடைய வயதை வெறும் நம்பராக்கி அனுபவத்தால் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ள அவர் ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சொல்லப்போனால் 21ஆம் நூற்றாண்டில் ஐசிசி பவுலிங் தரவரிசையில் 40 வயதுக்கு மேல் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் 1936க்குப்பின் 86 வருடங்கள் கழித்து உலகின் நம்பர் ஒன் இடத்தை அடைந்த மூத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளார். ஐசிசி பவுலிங் தரவரிசையில் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த பலர்களின் அந்த பட்டியல்:
1. பெர்ட் அயன்மொங்கர் : 50 வருடம் 326 நாட்கள் (1933)
2. கிளாரி கிரிம்மெட் : 44 வருடம் 130 நாட்கள் (1936)
3. டிச் பிரீமேன் : 41 வருடம் 44 நாட்கள் (1929)
4. சிட்னி பேர்ன்ஸ் : 40 வருடம் 305 நாட்கள் (1914)
5. ஜேம்ஸ் ஆண்டர்சன் : 40 வருடம் 237 நாட்கள்* (2023)

இதையும் படிங்க: IND vs AUS : ஒரு மேட்ச் கூட விளையாடாமல் ஆஸ்திரேலிய அணியிலிருந்து கழட்டிவிடப்பட்ட வீரர் – அடப்பாவமே இதுவேறயா?

தற்போது 866 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் அவருக்கு அடுத்தபடியாக 864 புள்ளிகளுடன் அஷ்வின் 2வது இடத்தில் இருக்கிறார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டியில் அசத்தும் பட்சத்தில் அஷ்வின் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் ஆல் ரவுண்டர்கள் பிரிவில் ஜடேஜா, அஷ்வின், அக்சர் படேல் ஆகியோர் முறையே 1, 2, 5 இடங்களை பிடித்து இந்தியாவுக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார்கள்.

Advertisement