அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த வேளையில் 557 வீரர்கள் மட்டுமே இறுதி செய்யப்பட்டு அந்த வீரர்கள் ஏலத்தில் விடப்பட்டனர். அதிலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் மட்டுமே 10 அணிகளாலும் வாங்கப்பட்டிருந்தனர்.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் :
இதன் காரணமாக பல நட்சத்திர வீரர்கள் விற்கப்படாமல் போயிருந்தனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தனது 42-வது வயதில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக விருப்பம் தெரிவித்து தனது பெயரை ஏலத்தில் பதிவு செய்திருந்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய அனுபவம் இருந்தாலும் இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத இவரை ஏலத்தில் யார் வாங்க போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் இந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்தின் மேடையில் கூட ஆண்டர்சன் பெயர் வராமல் போனது ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. ஒரு சில வீரர்கள் போல் அவரது பெயர் மேடைக்கு வந்து வாங்கப்படாமல் போயிருந்தால் கூட பரவாயில்லை.
ஆனால் ஏலம் நடைபெறும் மேடைக்கு கூட வராமல் ஆண்டர்சனின் பெயர் நிராகரிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் ஆண்டர்சன் பெயர் இப்படி ஏல மேடைக்கு வராமல் போனதற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஏலத்தின் இரண்டாம் நாள் அன்று விரைவாக ஏலம் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளில் 117-இல் இருந்து 557-வரை காத்திருப்பில் இருந்த வீரர்களில் வெறும் 143 வீரர்கள் மட்டும்தான் ஏலத்தில் கொண்டுவர வேண்டும் என்று அனைத்து அணிகளின் நிர்வாகங்களும் தனிப்பட்ட முறையில் முடிவு செய்து பரிந்துரைத்துள்ளது. இந்த 143 வீரர்களில் எந்த ஒரு அணியும் ஆண்டர்சனின் பெயரை ஏலத்தில் விடும்படி விருப்பப்பட்டியலில் குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க : இதான் இந்தியாவின் திறமை.. ஜெய்ஸ்வால் கலக்கிட்டாரு.. அந்த 4 பேர் வந்தா தாங்க மாட்டீங்க.. கிரேக் சேப்பல்
இதன் காரணமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் அந்த ஏலத்தில் நேரடியாக நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். தற்போது 42 வயதாகும் அவர் ஏற்கனவே டி20 கிரிக்கெட்டில் விளையாடி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பதனால் அவரை அடிப்படை விலையான ஒரு கோடியே 25 லட்ச ரூபாய்க்கு கூட எடுப்பது சரியான முடிவாக இருக்காது என்று அனைத்து ஐபிஎல் அணிகளும் அவரை நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



